"யாருக்கு வேணும் நிவாரண சேலை, எங்களுக்கும் வீடு கட்டி குடுங்க" தி.மு.க அமைச்சரை அதிரவைத்த பழங்குடி மக்கள்!

Update: 2021-05-17 10:30 GMT

நீலகிரி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பழங்குடிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கச் சென்ற அமைச்சரிடம் "வீடு வேண்டும்" எனக் கூறி நிவாரண உதவிகளை பழங்குடியினர் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


வனத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராமச்சந்திரன், கொரோனா நிவாரண உதவித்தொகையாக தமிழக அரசு வழங்கும் ரூபாய் 2,000 திட்டத்தை குன்னூரில் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். நேற்று கூடலூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க தற்காலிக மீட்பு முகாம்களுக்குச் சென்றார்.

அப்பொழுது பொன்னானி பகுதியிலுள்ள மீட்பு முகாமில் தக்கவைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு அமைச்சர் சேலைகளை வழங்க துவங்கினார். ஆனால் சேலையை வாங்க மறுத்த பழங்குடியினப் பெண்கள் சிலர், "எல்லா மழைக்கும் எங்களைக் கூட்டிட்டு வந்து முகாம்ல தங்கவெக்கிறீங்க. இதே மாதிரி சேலை, கம்பளின்னு கொடுத்துட்டுப் போறீங்க. இதுக்கு பதிலா எங்களுக்கு நல்ல இடத்துல வீடு கட்டிக் கொடுங்க. எல்லா மழைக்கும் பயந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. நூறு ரூபா சேலை வேண்டாம். எங்களுக்கு நிரந்தர வீடு கட்டித்தாங்க" என வாக்குவாதம் செய்து‌ சேலைகளை வாங்கப் பிடிவாதமாக மறுத்தனர்.


இதனால் அமைச்சர் தரப்பு ரொம்பவே சஞ்சலமானது. எவ்வளவோ முயற்சி செய்தும் அமைச்சர் தரப்பினால் நிவாரண பொருள்களை அந்த பழங்குடி மக்களுக்கு வழங்க இயலவில்லை. பின்னர் ஏமாற்றத்துடன் அமைச்சர் தரப்பு திரும்பி சென்றது.

Source - ஜூனியர் விகடன்

Similar News