மன்னார்குடி அரசு மருத்துவமனையின் அவல நிலை - புலம்பும் மக்கள்..!

Update: 2021-05-28 03:30 GMT

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் கொரோனா பரிசோதனை தாமதமாகிறது. இதனால் பொது மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொள்வதற்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் ஊழியர்களில் 5 பேரில் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்து கொள்ள வரும் நோயாளிகளை பரிசோதித்து முடிவு களை விரைவாக தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

தற்பொழுது 2 ஊழியர்களே கொரோனா தொற்று பரிசோதனை, ரத்த பரிசோதனை என பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் அவர்களும் பணிச்சுமைக்கு ஆளாகி உள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறையால் கொரோனா பரிசோதனை செய்வதற்கு தாமதம் ஆகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அவதிப்பட்டு வருகிறார்கள்.

பரிசோதனைக்கு தாமதமாவதால், மருத்துவமனையில் கூட்டம் சேர்ந்து சமூக இடைவெளி என்பது கேள்விக் குறியாகி விடுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே மருத்துவமனை நிர்வாகத்தினர் ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கி, தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும். கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களை காத்திருக்க வைக்காமல் உடனுடக்குடன் அனுப்பி வைக்கவும், பரிசோதனை முடிவுகளை தாமதமின்றி அறிவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

Similar News