பிரதமரிடம் நீட் தேர்வை ரத்து செய்ய நேரில் வலியுறுத்துவோம் - கனிமொழி சூளுரை!

Update: 2021-06-08 08:15 GMT

"முதல்வர் ஸ்டாலின் ஒரு உத்தரவிட்டால் போதும்.. எம்.பி-க்கள் எல்லாம் நாங்க ரெடி.. நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து பிரதமர் மோடியிடம் நேரிலேயே சென்று வலியுறுத்துவோம்" என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து ஆபீசில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கனிமொழி எம்பி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று இந்த ஒரு மாத காலத்தில் மக்கள் நலப் பணிகளை முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். மகளிருக்கு நகர பேருந்தில் இலவசமாக பயணம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்..

நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்வதற்காக முதலமைச்சர் ஒரு ஆய்வுக் குழுவையும் அமைத்துள்ளார். தி.மு.க நீட் தேர்வை எதிர்த்து வந்துள்ளது. தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவோம். கண்டிப்பாக நீட் தேர்வு இல்லாத நிலையை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி காட்டுவார். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தந்துள்ள வாக்குறுதிகளையும் கண்டிப்பாக அவர் நிறைவேற்றுவார். அதேசமயம், எம்பிக்கள் அனைவரும் நேரில் சென்று வலியுறுத்த வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டால் அதை கண்டிப்பாக செய்வோம்" என்றார் கனிமொழி.

Similar News