கோவில்களில் தமிழ் அர்ச்சனை போல மசூதிகளிலும் தமிழில் ஓதச் செய்யலாமே தி.மு.க அரசு? - பா.ஜ.க சீனிவாசன் கேள்வி!

Update: 2021-06-15 11:15 GMT

"இந்துக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஆர்வம்காட்டுகிற தி.மு.க அரசு, மசூதிகளிலும் அரபி மொழி தவிர்த்து, தமிழில் ஓதச் செய்யலாமே!" என தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளரும், பேராசிரியருமான ஶ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க அரசின் அறநிலையத்துறை பற்றிய அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு தனியார் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புகளை நாங்கள் வரவேற்கவில்லை. ஆனால், பாராட்டுகிறோம். ஏனெனில், இந்தத் திட்டங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க என எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்லாண்டுகளாக சொல்லிவருவதுதான். ஆனால், 50 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்த திராவிடக் கட்சிகள் ஏன் இதையெல்லாம் முன்னரே செய்யவில்லை... அப்போதெல்லாம் உங்கள் சமூகநீதி எங்கே போயிற்று?

'அனைத்து மதத்தினரும் அர்ச்சகராகலாம்' என்ற திட்டத்தை ஏற்கெனவே கேரள அரசு செய்துகாட்டிவிட்டது. எனவே, தி.மு.க அரசுதான் இதைப் புதிதாக, முதன்முறையாக செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதேபோல், தமிழில் அர்ச்சனை என்பதையும் ஏதோ இவர்கள்தான் புதிதாக அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதுபோல் அறிவிக்கிறார்கள். ஏற்கெனவே தமிழ்நாட்டில் பல கோயில்களில் தமிழில்தான் அர்ச்சனை நடைபெற்றுவருகிறது. எனவே அதுவும் புதிதல்ல என்பது என் கருத்து.

இந்துக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஆர்வம்காட்டுகிற தி.மு.க அரசு, மசூதிகளிலும் அரபி மொழி தவிர்த்து, தமிழில் ஓதச் செய்யலாமே! மதச்சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொள்கிற தி.மு.க அரசு ஏன் அதைச் செய்யவில்லை? தமிழ்நாட்டில், எந்தப் பள்ளிவாசலிலும் பெண்களுக்குத் தொழுகை நடத்த அனுமதி இல்லை. எந்த கிறிஸ்தவ ஆலயத்திலும் பெண் பாதிரியார்கள் இல்லை. இந்து மதத்தில் மட்டும் மாற்றங்களைக் கொண்டு வராமல், முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களிலும் தி.மு.க அரசு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்... அப்படியென்றால்தான் அது மதச்சார்பற்ற அரசு!'' என கூறினார்.

Source - ஜூனியர் விகடன்

Similar News