உழைப்பிற்கான உரிய, உயர்ந்த அங்கீகாரம் பா.ஜ.கவில் மட்டுமே சாத்தியம் - நிரூபித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Update: 2021-07-07 14:15 GMT

உழைப்பவர்களுக்கு உரிய நேரத்தில், உயர்ந்த அங்கீகாரம் பா.ஜ.க'வில் மட்டுமே சாத்தியம் என மீண்டும் ஒருமுறை எல்.முருகன் விவகாரத்தில் நிரூபணம் ஆகியிருக்கிறது.

தற்போது மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உள்பட புதிதாக 43 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் பா.ஜ.கவுக்கு பிரதிநிதித்துவம் வாங்கிக் கொடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகனுக்கு தற்போது மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி கிராமத்தில் பிறந்த எல்.முருகன் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலை பட்டத்தையும் அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.

1997-ல் தனது கல்லூரி பருவத்தின் போதே இந்துத்துவா சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மாணவர் பிரிவின் உறுப்பினராக இணைந்தார். அதன் பிறகு, தேசிய தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி, எஸ்டி) ஆணைய துணைத் தலைவராக இருந்தார்.

முதன் முறையாக 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கிய முருகன் வெற்றி வாய்ப்பை இழந்தார். கேரள மாநில பொறுப்பாளராக சில காலம் பதவி வகித்தார். பின்னர் தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றார்.

இக்கட்டான சூழலில் தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற பின் பம்பரமாக சுழன்றார். பொறுப்புடனும் கட்சியைத் தமிழகத்தில் வழிநடத்தினார். கருப்பர் கூட்டத்திற்கு எதிராக வேல் யாத்திரை நடத்தியது, அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு இணையாக பா.ஜ.க சார்பாகப் பேரணி நடத்தியது, நிகழ்ச்சிகளை நடத்தியது என எல்.முருகன், கட்சியோடு தன்னையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார். விளைவு தமிழகத்தில் நான்கு எம்.எல்.ஏ'க்கள் பா.ஜ.க சார்பில் சட்டமன்றத்தில் நுழைந்தனர்.

இந்த உழைப்பின் பலனாக இன்று மத்திய அமைச்சராக பொறுப்பு அவர் வசம் தேடி வந்துள்ளது.

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் போர்வையில் குடும்ப கட்சியாக இயங்கிவரும் நிலையில், பதவிக்காக வயது குறைவாக இருந்தாலும் அரசியல் தலைவர்கள் படியில் தொங்க வேண்டிய நிலையில் இருந்தாலும், தலைவர் மகன் என்ற ஒரே காரணத்தால் தனது 30வது திருமணநாளை தன்னைவிட 20 வயது சிறியவரிடத்தில் ஆசீர்வாதம் வாங்க வேண்டிய இழிநிலையில் இருந்தாலும், பணத்தை வாரி இறைத்து பதவியை அடைய வேண்டிய நிலை இருந்தாலும், அனைத்தையும் சகித்துக்கொண்டு வாழப்பழகிய தமிழக திராவிட கட்சிகளின் அரசியல் தலைவர்கள் மத்தியில் உழைப்பின் பலனை உரிய நேரத்தில் உயர்ந்த பலனாக கிடைக்கப்பெற பா.ஜ.க'வில் இருந்து உழைப்பது மட்டுமே சிறந்தது என உதாரணமாக திகழ்கிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்.

Similar News