இருளில் கிடக்கும் நாகை பேருந்து நிலையம் - கண்டுகொள்ளாமல் அலுவலகம் திறப்பதில் குறியாக இருக்கும் எம்.எல்.ஏ ஷா நவாஸ்!

Update: 2021-07-11 04:00 GMT

நாகை புதிய பஸ் நிலையம் இருளில் மூழ்கிக்கிடக்கிறது. இதனை கவனிக்காமல் நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் தனது அலுவலகம் திறப்பதிலேயே குறியாக உள்ளார் என புகார் கிளம்பியுள்ளது.

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் ஆகியவை அமைந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதனால் நாகை மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா தளங்களில் மையப்பகுதியில் இருப்பதால்

நாகை புதிய பஸ் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள வேளாங்கண்ணி, திருக்குவளை மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் வழித்தடத்தில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள், பஸ் நிலையத்தில் மின்விளக்கு இன்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அச்சத்துடனேயே உள்ளனர். அருகில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளதால் அங்கு செல்வதற்காக கிராம பகுதியில் இருந்து ஏராளமானோர் புதிய பஸ் நிலையம் வருகின்றனர். இவ்வாறு பரபரப்பாக காணப்படும் இந்த வழித்தடத்தில் மின் விளக்குகள் எரியாததால் பெண்களிடம் செயின் பறிப்பு உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே முக்கியத்துவம் வாய்ந்த நாகை புதிய பஸ்நிலையத்தில் வேளாங்கண்ணி மார்க்கமாக செல்லும் வழித்தடத்தில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். நாகை பேருந்து நிலையம் இப்படி அவல நிலையில் இருக்கும் போது இதனை கண்டுகொள்ளாமல் நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் தனது சட்டமன்ற அலுவலகம் திறப்பதிலேயே குறியாக உள்ளார் என நாகை வாழ் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.



Similar News