காங்கிரஸ் வேட்பாளர் மரணமடைந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் நிலை என்ன?

Update: 2021-04-11 06:15 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து வரும் மே 2ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொரோனோ தொற்றால் மரணமடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைதொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா? அல்லது இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ் என்ற வேட்பாளர் போட்டியிட்டார்.

இரண்டே நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனைதொடர்ந்து செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 7.55 மணி அளவில் காலமானார்.

கடந்த 6ஆம் தேதி நடந்தத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் 73.03 சதவீத வாக்குகள் பதிவாயின. வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் மரணமடைந்துள்ளதால் அந்த தொகுதியின் நிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கான விளக்கத்தை அளித்துள்ளார். அதில், "மாதவராவ் ஒருவேளை வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அப்படி மாதவராவ் வெற்றி பெறாமல் பிற கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை" எனவும் விளக்கமளித்துள்ளார்.

Similar News