தி.மு.கவின் 3 ஆண்டு கால அலங்கோல ஆட்சி.. குற்ற செயல்களே சாட்சி.. அண்ணாமலை அறிக்கை..
தமிழகத்தில் திமுக மூன்று ஆண்டு ஆட்சியின் விளைவாக தற்போது கொலை நகரமாக உருவெடுத்து இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து அறிக்கையில் அவர் கூறும் பொழுது, "திமுக ஆட்சிக்கு பின் தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளை குறித்த செய்திகள் இடம்பெறாத நாட்களே இல்லை என்ற மோசமான நிலையில் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக வயதானவர்கள் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக National Crime Records Bureau அறிக்கை தெரிவித்து இருக்கிறது.
முதலமைச்சர் உண்மையில் செய்திகளைப் படிக்கிறாரா? அவருக்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகள் தெரிவிக்கிறார்களா? என்பது கூடத் தெரியவில்லை. தமிழகத்தின் எந்தப் பகுதியிலுமே பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. உண்மையில் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் காவல்துறை இயங்குகிறதா? என்ற கேள்வியையும், அச்ச உணர்வையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, தலைநகரம் சென்னை, கொலை நகரமாகவே மாறிவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பில் இருக்கும் காவல்துறை முற்றிலும் செயலிழந்திருப்பதைக் காட்டுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது மரணப்படுக்கையில் கிடப்பதை உணர முடிகிறது. நேற்று மட்டும் சென்னையில் நடந்த மூன்று கொலைகள், இங்கிருக்கும் சட்டம் ஒழுங்கை பிரதிபலிக்கிறது.
திமுகவின் மூன்று ஆண்டு கால அலங்கோல ஆட்சியில், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க முடியவில்லை. இவை பல மடங்கு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், குற்றச் செயல்களையும், போதைப் பொருள்கள் புழக்கத்தையும் இனியும் கட்டுப்படுத்தவில்லை என்றால், பெரும் எதிர்விளைவுகளை திமுக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News