இனி 7 நாட்களில் அரசியல் கட்சி தொடங்கலாம்! தேர்தல் ஆணையத்தின் விதியில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்!

Update: 2021-03-03 02:50 GMT

அரசியல் கட்சிகளின் பதிவு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, 29ஏ பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இப்பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய விரும்பும் கட்சி, அரசியல் சாசனத்தில் 324வது பிரிவு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, 29 ஏ பிரிவின் கீழ் வழங்கப்பட்ட விதிமுறைகள் படி, கட்சி தொடங்கி 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

தற்போதுள்ள விதிமுறைப்படி, விண்ணப்பிக்கும் அமைப்பு கட்சியின் பெயரை இரண்டு தேசிய தினசரி நாளிதழ்கள், இரண்டு உள்ளூர் தினசரி நாளிதழ்களில் பொது அறிவிப்பாக வெளியிட வேண்டும்.

இது தொடர்பாக யாராவது எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால், பொது அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொது தேர்தல்களை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26ஆம் தேதி அறிவித்தது. கொவிட்-19 சூழல் காரணமாக, புதிய அரசியல் கட்சிகளின் பதிவு குறித்த விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க தாமதம் ஏற்பட்டது, தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆகையால், இவற்றை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் சில தளர்வுகளை அளித்து, புதிய அரசியல் கட்சிகள் பொது அறிவிப்பு வெளியிடும் காலத்தை 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைத்துள்ளது. 

இந்த தளர்வு, அசாம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகி மாநிலங்களில் சட்டப்பேரவை பொது தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின் கடைசி தேதியான மார்ச்19மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப் பேரவை தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதி ஏப்ரல் 07வரை அமலில் இருக்கும்.

Similar News