அகமது படேல் மரணம்: பிளவடையாமல் தப்பிக்குமா காங்கிரஸ்?

அகமது படேல் மரணம்: பிளவடையாமல் தப்பிக்குமா காங்கிரஸ்?

Update: 2020-11-26 06:45 GMT

காங்கிரஸ் கட்சியில் முக்கியமான தலைவரும் சோனியா காந்திக்கு மிக நெருக்கமான அரசியல் ஆலோசகருமான அகமது பட்டேல் கொரனா வைரஸ் சிக்கல்கள் காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார்.

 குஜராத்தை சேர்ந்த அகமது பட்டேலுக்கு பல முகங்கள் உண்டு.  திரைக்குப் பின்னால் இருந்து காங்கிரஸ் கட்சியை இயக்குபவர், உள்ளிருக்கும் அனைத்து கோஷ்டிப் பூசல்களையும் சரிசெய்து ஒன்றிணைப்பவர், UPA அரசாங்கம் நடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பாலத்தை ஏற்படுத்தியவர், 20 வருடங்களாக சோனியா காந்தியின் நெருங்கிய ஆலோசகர், கட்சியின் பொருளாளராக காங்கிரஸின் பணப்பையை கட்டுப்படுத்தியவர் என அவரின் பணிகள் பல.

2014ல் இருந்து பா.ஜ.கவின் ஆதிக்கம் இந்திய அரசியலில் ஆரம்பித்ததில் இருந்து, கடந்த ஆறு வருடங்களாக அகமது படேல் செய்துவந்த பணி என்ன என்று பலரும் மறந்து இருக்கலாம். அது மன சோர்வடைந்து வலுவிழந்த காங்கிரசை ஒன்றாக இணைத்து வைத்திருந்தது. 

காங்கிரஸ் கட்சி நடந்து வரும் முறை பற்றி பல தலைவர்கள் அதிருப்தியில் இருக்கின்றார்கள். பீஹார் தேர்தலில் காங்கிரசின் மோசமான செயல்பாட்டிற்கு பிறகு அவர்களுடைய அதிருப்தி மறுபடியும் வெளிப்படையாக வெடித்தது. இந்நிலையில் இம்மாதிரி அதிருப்தியாளர்களை சமாளிக்கும் திறமை உடைய ஒருவரை சோனியாகாந்தி இழந்து விட்டார்.

 கடந்த ஜூலை மாதம், இளம் தலைவரான சச்சின் பைலட், ராஜஸ்தானில் அசோக் கெலாட்டை எதிர்த்து போராடினார். அப்போது, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கத்தை காப்பாற்ற அகமது பட்டேல் பின்னாலிருந்து ஆவேசமாக செயல்பட்டதாக அறியப்படுகிறது. தற்போது அவர் இல்லாமல், சமாதான உடன்படிக்கை கூட கையெழுத்திடப்படாமல் இருக்கிறது. 

UPA ஆட்சியின் போதும் இது போல ஒரு நிலைமை இருந்தது. அப்பொழுது இந்த வேலையை பிரணாப் முகர்ஜி வெளிப்படையாக செய்து வந்தார். ஆனால் பின்னாலிருந்து அகமது பட்டேல் தான் இப்பணியை செய்து வந்தார்.

 சோனியா காந்தியிடம் யார் செல்வது, யார் செல்ல முடியாது என்ற அணுகலை கட்டுப்படுத்துவது, காந்தி குடும்பத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்ய நினைத்த எதிர்ப்பாளர்களைத் தணிப்பது என பல வேலைகளை செய்து வந்தார்.

 ஆனால் 2014 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அதிகாரத்தை இழந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.கவின் காவிப் பிடிக்குள் சென்று கொண்டிருந்தனர். அதைத்  தடுத்து வைத்திருப்பது தான் படேலின் மிகப்பெரிய பணி ஆயிற்று.

 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 20க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் ஒரு கடிதத்தில், காங்கிரஸ் கட்சி நடத்துவது குறித்து கேள்விகளை எழுப்பிய பின்னரும் காங்கிரஸ் கட்சி பிளவு அடையாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அகமது படேல் என அறியப்பட்டார்.

 ஆனால் அவர் கொரானா வைரஸ் உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திலிருந்து மறுபடியும் காங்கிரஸ் எதிர்கொள்ளும் அதே பிரச்சினைகள் தலைதூக்கத் தொடங்கி உள்ளன. ஏனெனில் காந்தி குடும்பத்தை அணுகுவதற்கு அகமது படேலின் செல்வாக்கு, அந்தஸ்து வேறு யாருக்கும் இல்லை.

 காங்கிரஸ் ஒரு நெருக்கடியில் தற்பொழுது இருக்கிறது தற்பொழுது அவருடைய இடத்தை நிரப்புவதற்கு சாத்தியம் இல்லை. சோனியா காந்தி உடல்நிலை பல மாதங்களாக கவலைக்குரியதாக அறியப்படுகிறது. தன் மகன் ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்பது அவருடைய லட்சியம். ஆனால் 2019 தோல்விக்குப் பின்னர் ராஜினாமா செய்த ராகுல் காந்தி மறுபடியும் காங்கிரஸ் தலைவர் ஆக்கப்பட்டால் அது பல எதிர்ப்புகளை சந்திக்கும்.

 காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் இதுவரை காந்தி குடும்பத்தை நேரடியாக தாக்காமல் கவனமாக இருந்து வந்தனர். ஆனால் இனிமேல் அப்படி நடக்குமா என்பது தெரியவில்லை. 

 அகமது படேல் இல்லாமல் நோய்வாய்ப்பட்ட சோனியா காந்தி தனது கட்சியின் கருத்து வேறுபாடுகளை சரி செய்வது சரி செய்வது மிகவும் சவாலாக இருக்கும்.  வரும் குளிர் காலத்தில் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி அதிகரிக்கும் பொழுது இந்தப் பிரச்சினை எந்த அளவுக்கு பெரிதாக வெடிக்கும் என்பது நமக்கு தெரியவரும்.

Similar News