குடும்ப அரசியல் இல்லாமல் சுயமாக உழைக்கும் சமுதாயத்திற்கான கட்சி பா.ஜ.க - அண்ணாமலை.! @annamalai_k

குடும்ப அரசியல் இல்லாமல் சுயமாக உழைக்கும் சமுதாயத்திற்கான கட்சி பா.ஜ.க - அண்ணாமலை.! @annamalai_k

Update: 2020-10-18 18:58 GMT

"குடும்ப அரசியல் இல்லாமல், சுயமாக உழைத்து சமுதாயத்துக்கு மாற்றத்தை கொடுக்கும் கட்சி பா.ஜ.க" என பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

புதுச்சேரியில் `நம்மில் ஒரு தலைவன்' அறக்கட்டளை தொடக்க விழா ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று தொடக்கி வைத்து பேசிய அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது, "விவசாயம், மாணவர்களை மையமாக வைத்து நல்ல தலைவர்களை உருவாக்கி அதன் மூலம் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். புதிது புதிதாக இளைஞர்கள் சமூகத்தில் வந்து தன்னார்வலர்களாக சுயநலமின்றி சில பணிகளை செய்யும்போதுதான் சமூதாயம் முன்னோக்கி செல்லும்" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "அனைத்து இடங்களிலும் மாற்றம் தேவைப்படுகிறது. மாற்றம் வேண்டும் என்பதை மேம்போக்காக சொல்லிவிட்டு போய்விடுகிறோம். ஆனால், அதனை அடிப்படையில் இருந்து ஆரம்பிக்கும்போது மாற்றங்கள் நிரந்தரமாக இருக்கும். விவசாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால், விவசாயத்தை ஊக்குவித்து, அதனை உண்மையாகவே லாபகரமான தொழிலாக மாற்றுவதுதான் நல்ல மாற்றமாக இருக்கும். கல்வியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அடிப்படையில் இருந்து மாற்றங்களை ஆரம்பிக்கும்போது மாணவர்கள் தலைவர்களாக மாறுகின்றனர். அந்த தலைவர்கள் சமுதாயத்தினுள் வரும்போது சுயநலமில்லாமல் சேவையாற்றுவார்கள். அரசியல் என்பது மாற்றத்தில் ஒரு பங்குதான். ஆனால் அது மட்டுமே நம்முடைய வாழ்வை தீர்மானிப்பது இல்லை.

அதனை தவிர்த்து நம்முடைய வாழ்விலும் அத்தியாவசியமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் ஊழல் இல்லாத நிர்வாகம் நடைபெற வேண்டும். சுயநலமில்லாத தலைவர்கள் உருவாக வேண்டும். புதுச்சேரியிலும் மாற்றம் தேவைப்படுகிறது. புதுச்சேரி மத்திய அரசை நம்பிதான் இருக்கிறது. அதேசமயம் எல்லா நேரத்திலும் மத்திய அரசை நம்பியிருக்க முடியாது. அதற்காக 'நம்மில் ஒரு தலைவன்' அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் `திங்க் புதுச்சேரி' என்ற குறும்படத்தை தயாரித்து அனைத்துக் கட்சியினருக்கும் கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும் பா.ஜ.க பற்றி பேசும் போது, "எனக்கு சிந்தனை அடிப்படையில் பிடித்த கட்சி பா.ஜ.க. அதன் தலைவர்களை எனக்குப் பிடிக்கும். குடும்ப அரசியல் இல்லாமல், சுயமாக உழைத்து சமுதாயத்துக்கு மாற்றத்தை கொடுக்கும் கட்சியாக இருக்கிறது பா.ஜ.க. கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு உண்மையாகவே தேவைப்படும் ஒன்று. அதற்காகத்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றமும் அதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆளுநர் அதற்கான அனுமதியை வழங்குவார். பா.ஜ.கவும் அதனை அனைத்து இடங்களிலும் தெளிவுப்படுத்தியிருக்கிறது" என்று பேசினார்.

Similar News