மதரஸாக்களை இழுத்து மூட மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தது அசாம் அரசு!

மதரஸாக்களை இழுத்து மூட மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தது அசாம் அரசு!

Update: 2020-12-28 16:43 GMT

மூன்று நாள் அசாம் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தில் அரசு நிதியுதவியுடன் நடக்கும் மதரஸாக்கலை ரத்து செய்வதற்கான மசோதாவை அசாம் அரசு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது.

குளிர்கால அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக ஊடகங்களுடன் பேசிய அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மசோதா நிறைவேற்றப்பட்டதும், மாநில அரசால் மதரஸாவை நடத்தும் நடைமுறை முடிவுக்கு வரும் என்று கூறினார்.

முன்னதாக, அக்டோபரில், அசாமில் உள்ள மதரஸா வாரியம் கலைக்கப்படும் என்றும், அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களும் பொதுப் பள்ளிகளாக மாற்றப்படும் என்றும் சர்மா அறிவித்திருந்தார். அதே சமயம் தனியார் மதரஸாக்களை மூட அரசாங்கம் விரும்பவில்லை என்று அவர் மேலும் தெளிவுபடுத்தியிருந்தார்.

அறிக்கையின்படி, அசாமில் 614 அரசு உதவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் மற்றும் சுமார் 900 தனியார் மதரஸாக்கள் உள்ளன. இதற்காக அரசு ஆண்டுக்கு ரூ 260 கோடி செலவிடுகிறது. இதேபோல் ஏறக்குறைய 1,000 அங்கீகரிக்கப்பட்ட சமஸ்கிருத பள்ளிகள் உள்ளன. அவற்றில் 100 அரசாங்க உதவியுடன் உள்ளன.

அசாம் அமைச்சரவை, முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான கூட்டத்தில், டிசம்பர் 15 ம் தேதி, அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் மாநிலத்தில் அரசு நிதியுதவியுடன் செயல்படும் மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகள் அனைத்தும் பொதுப்பள்ளிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News