பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டம்.. முதல்வருக்கு டெல்லியில் இருந்து வந்த கடிதம்.. திமுக அரசின் முடிவு என்ன?

Update: 2024-08-31 14:23 GMT

பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டுள்ளார். சமக்ரா சிக்‌ஷா திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27ம் தேதி எழுதிய கடிதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மு.க. ஸ்டாலினுக்கு, தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். அதில் 2023-24 ம் நிதி ஆண்டில் இத்திட்டத்துக்கான ஒதுக்கீட்டின் கீழ் நான்கு தவணைகளாக ரூ. 1876.15 கோடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி ஆண்டுக்கு ரூ. 4305.66 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2020 சிறந்த பலன்களை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்த சமக்ரா சிக்ஷா திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்துவதை அவர் குறிப்பிட்டுள்ளார். சமக்ரா சிக்ஷா திட்டத்தின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். பன்மொழிக் கற்றல் மற்றும் தாய்மொழியில் கல்வி கற்றலை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகவும், இந்தியாவின் பழமையான மொழியாகவும் தமிழ் திகழ்வது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான கலாச்சார சங்கமத்தைக் கொண்டாடுவதற்காக கல்வி அமைச்சகத்தால் காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டதையும் திரு தர்மேந்திர பிரதான் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், தமிழ் மொழியைக் கற்பதற்கு வசதியாக ஒரு பிரத்யேக தமிழ் அலைவரிசை, 2024 ஜூலை 29 அன்று தொடங்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு தொடக்கத்தில் ஒப்புக் கொண்டதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். ஆனால் இதுவரை கையெழுத்திடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்வது முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டு முயற்சிகள் மூலம், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஏற்கெனவே முன்வந்தபடி, பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தர்மேந்திரப் பிரதான் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News