கொரோனா தடுப்பூசி இலவசம்: பீகார் மாநில பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி, தொடர்ந்து தமிழக முதல்வரும் அறிவிப்பு.!

கொரோனா தடுப்பூசி இலவசம்: பீகார் மாநில பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி, தொடர்ந்து தமிழக முதல்வரும் அறிவிப்பு.!

Update: 2020-10-23 09:42 GMT

இந்தியாவில் 10 லட்சம் பேரில் 5 ஆயிரத்து 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று திரும்பியவர்களை மீண்டும் சில காலம் கழித்து கொரோனா தாக்குவது அதிர்ச்சிக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் சில பேருக்கு கொரோனா சோதனை செய்யும்போது நெகட்டிவ் என முடிவுகள் காட்டுகிறது. ஆனால் அவர்கள் மேலும் அவதிக்குள்ளாகும்போது அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வருகிறது. சில பேருக்கு கொரொனோ தொற்று இருந்தும் அவர்களிடம் எந்த அறிகுறியும் தென் படுவதில்லை, ஆனால் அவர்களுக்கு தெரியாமலேயே பல பேருக்கு அவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவி வருகிறது.

ஏற்கனவே எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நுரையீரல், இதயம் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளானவர்கள் இந்த தொற்றினால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். உயர் சிகிச்சை அளித்தும் சிலரின் உயிரைக் காப்பற்றமுடியாமல் போய்விடுகிறது. பிறந்த குழந்தைக்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் கூட கொரோனா தொற்று ஏற்படுவதாக கூறப்படும் நிலையில் இதற்கான சரியான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை என்பதை மருத்துவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

இந்நிலையில் சமூக இடைவெளியே தொற்று வராமல் தடுக்க சிறந்த வழி என கூறப்பட்டாலும் எல்லோருக்கும் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் சமூக இடைவெளிகளை கடைபிடிப்பது தினசரி வாழ்க்கையில் மிகவும் கடினமாக உள்ளது. மேலும் எங்கும் வெளியில் செல்லாதவர்களுக்கும் கூட தொற்று ஏற்பட்டு கடும் காய்ச்சல் வந்ததாகவும் செய்திகள் வருகின்றன. இது மருத்துவ உலகத்தையே குழப்புவதாக உள்ளது. இந்நிலையில் இதற்கு ஒரே தீர்வு தடுப்பு மருந்துதான் என உலக மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க கடும் முயற்சிகள் செய்து வந்த நிலையில் இந்தியாவுக்கான தடுப்பு மருந்துகள் தயாராகிவிட்டதாகவும், அது 3 கட்ட சோதனைகளாக இறுதிக் கட்டத்தில் உள்ளதாக சென்ற வாரம் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். இந்நிலையில் கொரோனாவுக்கு பல்வேறு விதமான தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். இந்த கொரோனா தடுப்பு மருந்துகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தவறாமல் கிடைக்கும் என்றார்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளில் சில இறுதிக் கட்ட பரிசோதனையில் இருப்பதாக அவர் கூறினார். ஆனால் அந்த தடுப்பு மருந்து மக்களுக்கு இலவசமாக கிடைக்குமா அல்லது கட்டணம் உண்டா என்பது குறித்து அவர் கூறவில்லை. இந்த சூழலில், கொரோனா தடுப்பூசியை நாட்டின் அனைத்து மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடனும், மாநில அரசுகளுடனும் விவாதித்து வருகிறது.

முதற்கட்டமாக, தடுப்பூசியை விலைக்கு வாங்கி அனைவருக்கும் செலுத்தும் திட்டத்திற்காக ரூ.50 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு நிதியாண்டு முடிகிற மார்ச் 31 ஆம் தேதி வரைக்கான ஒதுக்கீடு இது என கூறப்படுகிறது. வரும் நிதியாண்டிலும் தடுப்பூசிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. ஒரு நபருக்கு இரண்டு முறை தடுப்பூசி போட தலா 150 ரூபாயும், தடுப்பூசியை பாதுகாப்பான முறையில் இருப்பு வைத்து விநியோகிக்க நபர் ஒருவருக்காக 225 ரூபாயும் செலவிட வேண்டி வரும் என கணக்கிடப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்நிலையில் சட்டசபை தேர்தலை விரைவில் எதிர்நோக்கும் பீகார் மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என அம்மாநில பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. அதேபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மக்களிடம் கட்டணம் பெறாமல் இலவசமாக தடுப்பு மருந்து கிடைக்க செய்வோம் எனக் கூறியுள்ளார். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் வரும் பிப்ரவரிக்குள் கட்டுக்குள் வந்துவிடும் எனவும் அரசு சார்பான நிபுணர் குழு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News