திருசெந்தூரில் வெற்றி யாத்திரைக்கான வேலை வைத்து சிறப்பு வழிபாடு - சூரர்களை விரட்டியடிக்க பாஜகவினர் மனமுருக வேண்டினர்.!

திருசெந்தூரில் வெற்றி யாத்திரைக்கான வேலை வைத்து சிறப்பு வழிபாடு - சூரர்களை விரட்டியடிக்க பாஜகவினர் மனமுருக வேண்டினர்.!

Update: 2020-10-31 09:33 GMT

கருப்பர் கூட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் யூ டியூப் சேனல் ஒன்றில் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தும், புராணங்களை கேலி செய்தும் தொடர்ந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்ததாக செய்திகள் வந்தன. மேலும், தமிழர்களின் கடவுளான முருகனின் கந்த சஷ்டி கவசம் குறித்தும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று அந்த யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்படது.

இதையடுத்து, முருக கடவுளை இழிவுபடுத்திய அந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. குறிப்பாக இந்த விவகாரத்தை மிகத்தீவிரமாக கையில் எடுத்தது பாஜக. கருப்பர் கூட்டத்தை கைது செய்ய வேண்டும், குறிப்பாக அந்த கூட்டத்தின் பின்னால் இருப்பவர்களையும் போலீசார் அடையாளம் கண்டு அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கோரி வலியுறுத்தி வந்த நிலையில் போலீசார் சிலரை கைது செய்தனர்.

அவர்களில் ஒருவர் திமுகவின் மாநில அளவிலான முன்னாள் ஐ.டி பொறுப்பாளர் எனக் கூறிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இந்த சம்பவத்தின் பின்னணியில் திமுக இருக்கக் கூடும் என சந்தேகம் தெரிவித்து வருகிறார்.

இந்த சம்பவத்தை கண்டித்து கொரோனா காலத்திலும் மாநிலம் முழுவதும் பாஜகவினர் 2 மாதங்களுக்கு முன்னால் வீட்டில் இருந்தவாறே வேல் பூஜை செய்தனர். வீட்டில் இருந்தே செய்த இந்த வேல் பூஜை நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் மிக சிறப்பாக தொண்டர்களாலும், நிர்வாகிகளாலும் கடைபிடிக்கப்பட்டதாக அக்ககட்சியினர் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சிகள் பல்வேறு ஊடகங்கள் மூலம் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் அக்கட்சியின் தொண்டர்கள் வேல், வேல் வெற்றிவேல் என மாநில தலைவர் முருகனின் சுற்றுப் பயணங்களின் போது கோஷமிட்டனர். மாநிலத்தலைவர் பெயரும் முருகன் என்பதால் அவரது கையில் வேலை கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்து சுற்றுப்பயணங்களின் போது ஆங்காங்கு அவரை முருகரதம் தயார் செய்து அதில் அமரவைத்து வெற்றி வேல், வீர வேல் என உற்சாகமாக கோஷமிடுவது தமிழக அரசியலில் புதியதாக உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பாஜகவுக்கு செல்வாக்கான இடங்களுக்கு சென்று தொண்டர்கள் தரிசனம் செய்வது, பொது மக்கள் இடையே பாஜகவின் திட்டங்கள், சாதனைகளைக் கொண்டு செல்வது போன்ற திட்டங்களை பாஜக வகுத்துள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த யாத்திரையின்போது கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செல்லுமிடங்களில் திமுகவின் ஹிந்து மத துவேஷங்களையும், ஹிந்துக்களை வெறுக்கும் அவர்களின் குணாதிசயங்கள் குறித்தும் பிரச்சாரம் நடக்கும் என அக்கட்சியினர் கூறுகின்றனர். முருகர் தமிழ் கடவுளாக கருதப்படுவதால் தமிழகம் முழுவதும் முருகபகதர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். மேலும் பாஜகவுக்கு செல்வாக்குள்ள பகுதிகளாக கருதப்படும் கொங்கு மண்டலப்பகுதிகள் மற்றும் தென் தமிழக பகுதிகள் முரட்டு முருக பக்தர்கள் அதிகம் உள்ள பகுதிகள்.இந்த பகுதிகளில்தான் முருகனின் 6 படை வீடுகளில் 5 படை வீடுகள் உள்ளன.

எனவே சட்டசபை தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் தன் செல்வாக்கை கூர்மை படுத்தவும், தொண்டர்களை கவரவும் இந்த வெற்றிவேல் நிகழ்ச்சி கை கொடுக்குமென்று பாஜகவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வெற்றிவேல் யாத்திரை வரும் நவம்பர் மாதம் 6- ந்தேதி முதல் டிசம்பர் 6 வரை தமிழ்க்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் நடைபெறவுள்ளது.

நவம்பர் மாதம் 6- ந்தேதி திருத்தணியில் இருந்து புறப்படுகிறது. இதற்காக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கான வேல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் இந்த யாத்திரை நடைபெறக் கூடாது என்றும், யாத்திரை நடைபெற்றால் யாத்திரை செல்லுமிடங்களில் கலவரங்கள் உண்டாகுமென்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போலீஸ் ஆணையரிடம் புகார் அளித்துள்ளன. மேலும் இது கொரோனா காலம் என்பதாலும் அந்த யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் எங்கள் யாத்திரை இப்போதே திமுக கூட்டணியினருக்கு வயிற்றில் புளியை கரைத்து வருவதாகவும், அதனால்தான் அவர்கள் எங்கள் யாத்திரை திட்டத்தை தடுத்து நிறுத்த பார்க்கின்றனர் என்றும் பாஜகவினர் கூறுகின்றனர்.

Similar News