நீதிமன்றத்துக்கு கீழ்ப்படியாமல் நடக்கிறாரா ஆந்திர முதல்வர் ஜெகன்? வெடிக்கும் சர்ச்சை!

நீதிமன்றத்துக்கு கீழ்ப்படியாமல் நடக்கிறாரா ஆந்திர முதல்வர் ஜெகன்? வெடிக்கும் சர்ச்சை!

Update: 2020-11-03 13:00 GMT

நீதிபதி ரமணாவுக்கு எதிராக தலைமை நீதிபதி போட்படேவுக்கு கடிதம் எழுதிய விஷயத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நீதிமன்றத்திற்கு கீழ்ப்படியாமல் நடந்துள்ளதாக அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஜெகன் மோகன் எழுதிய கடிதத்தை மேற்கோள்காட்டி பேசிய அட்டர்னி ஜெனரல் இவ்வாறு தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் ஒருவர் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரிய நிலையில் ஜெகன் மோகனின் செயல் நீதிமன்ற அவமதிப்பு தான் என்றாலும் வழக்கு தொடர அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டார்.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீது புகார் தெரிவித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த கடிதத்தின் நகலை சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமை ஆலோசகர் அஜயா கல்லம் வெளியிட்ட நிலையில்; பணியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி மீது ஆட்சியில் இருக்கும் ஒரு முதல்வர் குற்றம் சொல்கிறாரே என்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சிலரின் குற்ற வழக்குகளை நீதிபதி ரமணா விசாரணை செய்து வருகிறார் என்பதைத் தொடர்பு படுத்தி ஜெகன் மோகன் மீது விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஜெகன் மோகன் மீதும் 31 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு மாநிலத்தின் முதல்வரே நீதித்துறையை அவமதிப்பது போன்ற செயலாக இருப்பதால் அரசியல் மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெகன் மோகன் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி மீது வேண்டுமென்றே பழி போட்டு இது போல கடிதம் எழுதியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அட்டர்னி ஜெனரல் இது போன்ற செயல்கள் ஆந்திர முதல்வர் நீதிமன்றங்களுக்கு கீழ்ப்படியாமல் நடந்துக் கொள்வதையே காட்டுவதாகவும் எனினும் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டு உள்ளதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News