திருமாவளவன் நிலைமை திரிசங்கு.. வி.சி.கவுக்கு இனி கடைசி சங்கு - ஊதும் சிந்தனையில் ஆதரவாளர்கள்.!

திருமாவளவன் நிலைமை திரிசங்கு.. வி.சி.கவுக்கு இனி கடைசி சங்கு - ஊதும் சிந்தனையில் ஆதரவாளர்கள்.!

Update: 2020-11-04 09:31 GMT

தமிழகத்தில் முன் எப்போதுமில்லாத வகையில் பாஜக தன்னை வளர்த்துக் கொள்ளவும், தமிழக அரசியலில் ஒரு முக்கியத்துவம் பெற்ற கட்சியாக வளரவும் அதிக முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வளர்ச்சியை முன்வைத்து மத்தியில் மோடி அரசு செய்த சாதனைகள் மற்றும் தங்களது ஓரே தேச சித்தாந்தங்களை முன்னிறுத்தி வருகிறது. அக்கட்சியில் பல பிரபலங்களும், பல கட்சியை சேர்ந்த தொண்டர்களும் எப்போதும் இல்லாத வகையில் வந்து இணைகின்றனர்.

பாஜகவின் வளர்ச்சி மற்ற திராவிட கட்சிகளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவர்கள் காட்டும் எதிர்ப்பு மற்றும் முனைப்பை விட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதிகம் காட்டுவதேன்?

குறிப்பாக இப்போது வழக்கில் இல்லாத சனாதனம், வழக்கில் இல்லாத மனுதர்மம், ஆரிய எதிர்ப்பு இவற்றை எல்லாம் ஏதோ பெரியார் ஈ.வே.ரா வின் பிரதிநிதி போல இவர் கையிலெடுப்பது ஏன்? இதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன பயன்? என அவருடைய கட்சியில் உள்ளவர்கள் மற்றும் அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்களே இப்போது முணுத்து வருகிறார்கள் என கூறப்படுகிறது. ஏனெனில் ஆதி திராவிடர்களுக்கு அம்பேத்கர் இயற்றிய சட்டப்படி அனைத்து சலுகைககளும், பாதுகாப்பும் இப்போதும் தரப்படுகிறது.

பிரதமராக முதன் முதலாக மோடி பதவி ஏற்றதும் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவில் பேசியபோது " அம்பேத்கர் பெயரும், புகழும் உள்ளவரை ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள், பாதுகாப்பு எப்போதும் போல் தொடரும், ஒரு போதும் இந்த சலுகைகளை ஹரிஜன மக்கள் இழக்க மாட்டார்கள், இழக்க விட மாட்டோம் என்று கூறினார். அது மட்டுமல்லாமல் பாஜக அரசு ஹரிஜன சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகளை தருவதில் ஒரு முறைமையை பின்பற்றுகிறது. ஜனாதிபதி, கவர்னர்கள், கேபினட் அமைச்சர்கள் என உயரமான இடங்களில் ஹரிஜன சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அமர முடிகிறது.

ஆனால் மற்ற கட்சிகள் இவ்வாறு செயல்படவில்லை என தெரிந்தும் கூட திருமாவளவன்யாரையோ திருப்தி படுத்த தன்னையும் தனது ஆதரவாளர்களையும் ஒரு அடியாட்களாக மாற்றிக் கொண்டுள்ளார் என்றும், பாஜகவை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் ஹிந்து மதத்தை இழித்தும், பழித்தும் பேசுவதும், ஹிந்துக்களை புண்படுத்தி பேசுவதுமான அட்டகாசங்கள் நாளுக்கு நாள் பெருகிவருவதாக அவருடைய எதிர் தரப்பினர் கூறுகிறார்கள், குறிப்பாக சமீபத்தில் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையின் கீழ் தலித் பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வருகிறார்கள், மேலும் நடிகை குஷ்பு போன்றவர்களும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் திருமாவளவன் மனுதர்மத்தில் ஹிந்து பெண்கள் விபச்சாரிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர் எனக் கூறி அப்படி என்றால் ஹிந்து பெண்கள் எல்லாம் விபச்சாரிகளா எனக் கேட்டு தேவையற்ற ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார். இது தேவையற்ற சர்ச்சை எனக் கூறி அவருடைய ஆதரவாளர்களே அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாஜகவின் வேல் யாத்திரைக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் ? இதை அரசு தடுக்கவில்லை என்றால் நான் ஒரு கை பார்த்துவிடுவேன் என இவர் ஏன் கூறுகிறார்? என அவரது ஆதரவாளர்கள் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்களாம்.

இப்போது சொந்த சமூகத்தினர் இடையே திருமாவளவனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்றும், முருகன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் பாஜக பக்கம் திரும்பி வருகின்றனர் என்றும் கூறபபடுகிறது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

பாஜகவில் இணைந்த தேனி மாவட்டம் பொம்மிநாயகன் பட்டியை சேர்ந்த தலித் இளைஞர்கள் கூறுகையில் " எங்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இறந்த பெண்ணின் உடலை தாங்கள் வசிக்கும் பகுதி வழியாக கொண்டு செல்லக்கூடாது என இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், பின்னர் கலவரம் வெடித்தது, தலித் வீடுகள் சூறையாடப்பட்டன, ஆனால் எங்கள் பக்கம் நிற்கவேண்டிய திருமாவளவன் கலவரம் செய்த இஸ்லாமியர்களை கண்டிக்கவே இல்லை. அவர் சமாதானம் செய்ய முயன்றார், அன்றே எங்கள் சமூகத்தை விட திருமாவளவனுக்கு இஸ்லாமியர்கள்தான் மிக முக்கியம் என்பதை உணர்ந்தோம். எனவே அவரை விடுத்து இப்போது பாஜகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வேல் யாத்திரை நடைபெறும் பெரும்பாலான இடங்கள் பட்டியல் சமூக மக்கள் இருக்கும் இடங்களில் நடைபெறவுள்ளன என்பதும் அதில் பல பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் முன்னெடுக்க இருப்பதால், எங்கே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூடாரம் காலியாகிவிடும் என்பதால் திருமாவளவன் இப்போது வேல் யாத்திரையை தடை செய்ய கூறுகின்றார் எனவும் கூறுகின்றனர். மேலும் சமீபத்தில் ஒரு தலித் முதியவர் விடுதலைசிறுத்தைகள் கட்சிக் கொடியை எரித்துப் போட்டுவிட்டு, பாஜகவில் இணைந்த சம்பவமும் திருமாவளவனை அதிர்ச்சி அடையச் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் திருமாவளவன் இது போன்ற செயல்களை செய்து வரும் அதே வேளையில் திமுக பாமகவை தனது கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்வதாக செய்திகள் வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் போனால் போகட்டும் என்ற மன நிலையில் திமுக இருப்பதாகக் கூறுகின்றனர். அதே சமயம் தொடர்ந்து மதம் தொடர்பான சர்ச்சைகளில் ஈடுபட்டுவரும் திருமாவளவனை தம் பக்கம் சேர்க்க அதிமுகவும் தயங்கும்.

இந்த நிலையில் இப்போது வைகோவும் திமுகவில் இருந்து மூன்றாவது அணி அமைக்க வரமாட்டார், கம்யூனிஸ்டுகள் திமுகவை விட்டு வருவது கடினம், இந்நிலையில் நம் எதிர்காலம் என்னாவது என அவரது கட்சியினர் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும், திருமாவளவன் திரிசங்கு நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் திமுகவுக்கு சென்றாலும் அங்கே உதய சூரியன் சின்னம்தான் என கறாராக கூறுகிறார்களாம். இதனால்தான் எதிர்காலத்தில் அரசியல் அநாதை ஆகிவிட்டால் பெரியாரின் கைத்தடியாக நாம் ஆகி, பாஜகவை மும்முரமாக எதிர்க்கும் கடமையை செய்யலாம் என கணக்கு போடுகிறாராம். சமீபத்தில் அவர் ஒரு கூட்டத்தில் பேசுகையில் " பாஜகவின் ராமர் கோஷம் தமிழ்நாட்டில் எடுபடாது, இது ராமசாமி மண் ( (ஈ.வே.ரா மண்) மற்ற கட்சிகள் என்னை கூட்டணியில் சேர்க்காவிட்டாலும் நான் தனித்து நின்று பெரியார் கொள்கையை காப்பேன் என்று கூறினாராம்.

ஆனால் இதில் அவருடைய கட்சியினருக்கும், அம்பேத்கர் விசுவாசிகளுக்கும் சம்மதம் இல்லை எனக் கூறப்படுகிறது. இது திருமவளவனுக்கான திரிசங்கு மாத்திரம் அல்ல, வி.சி.கவுக்கு ஊதப்படும் கடைசி சங்காகக் கூட இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Similar News