விளக்கம் திருப்தி இல்லை.. ராசா பிரச்சாரத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.!

முதலமைச்சர் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்வதற்கு ராசாவிற்கு தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-04-01 10:09 GMT

தேர்தல் விதிமுறைகளை மீறிய புகார் காரணமாக திமுக எம்.பி. ராசா பிரச்சாரத்திற்கு 48 மணி நேரம் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக எம்.பி. ராசா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயாரை மிக மோசமான வார்த்தைகளால் பேசினார்.




 


அவரது பேச்சுக்கு தமிழகம் முழுவதும் மகளிர் அமைப்பு மற்றும் அதிமுகவினர் கண்டனங்களை தெரிவித்தனர். ராசாவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இதனையடுத்து தேர்தல் ஆணையம் ராசாவை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அவதூறு பேச்சு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது.

இந்நிலையில், முதலமைச்சர் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் 2 நாட்கள் பரப்புரை மேற்கொள்வதற்கு ராசாவிற்கு தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் பற்றி விமர்சித்தது குறித்து விளக்கம் அளித்தது திருப்தி அளிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 



மேலும், நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து ராசாவின் பெயரை நீக்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் திமுகவிற்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Similar News