"எதிர்கட்சியாகவே போலீசாரை மிரட்டும் தி.மு.க - ஆட்சிக்கு வந்தால்?" - தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதங்கம்!

"எதிர்கட்சியாகவே போலீசாரை மிரட்டும் தி.மு.க - ஆட்சிக்கு வந்தால்?" - தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதங்கம்!

Update: 2020-12-01 19:17 GMT
தி.மு.க ஆட்சியில் இல்லாத போதே, காவல்த்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுகின்றனர் ஆட்சியில் இருந்தால் என்னவாகும்? தி.மு.க-வில் யார் காலையாவதுதான் பிடித்து பதவிகளை அடைய முடியும். ஆனால், அ.தி.மு.க-வில் அப்படியில்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் தி.மு.க-வை கடுமையாக விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கிளைக் கழகப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஏராளமான கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கட்சி முன்னோடிகள் கலந்துக் கொண்டனர்.

அப்பொழுது பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “அ.தி.மு.க தொண்டர்கள் கழகத்தின் மீது எப்போதும் அன்பும் அக்கறையும் கொண்டவர்கள். தங்களது உழைப்பைக் கொடுத்து அ.தி.மு.க ஆட்சியை மீண்டும் மலரச் செய்வார்கள். அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகக் கொண்டுவரச் சபதம் ஏற்போம். கட்சியின் கரை வேட்டி கட்டிக்கொண்டு நடப்பதை நமது கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் பெருமையாக நினைப்பார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இறப்பதற்கு முன்பு கடைசியாகப் பேசிய வார்த்தைகள் “என் மறைவிற்குப் பிறகும் நூறாண்டு காலம் நம் கட்சியும் ஆட்சியும் தமிழகத்தில் மலர வேண்டும், தொடர வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்குத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்” என்று பேசினார்.

மேலும் தொடர்ந்த அவர், "தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்குவந்தால், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை மதிப்போடும் மரியாதையோடும்  நடத்துபவர்கள் அ.தி.மு.க-வினர்.  தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுகின்றனர். இவர்கள், ஆட்சிக்கு வந்துவிட்டால் அரசு அலுவலர்களின் நிலைமை என்னவாகும் என்று நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை, பழங்குடியின மக்களை தரக்குறைவாகப் பேசியது தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி. இதுதான் தி.மு.க.வின் உண்மை நிலை" என தி.மு.க-வின் உண்மை முகத்தை தோலுரித்தார்.

மேலும், "கட்சியில் உழைக்கும் தொண்டர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்ப்பது அ.தி.மு.க கட்சியில்தான். தி.மு.க.வில் யார் காலையாவது பிடித்துத்தான் பதவிக்கு வரமுடியும். அ.தி.மு.க.வில் அப்படி அல்ல. எளிய தொண்டனும் உயர் பதவிக்கு வரமுடியும்" என தி.மு.க-வின் கட்சி நிலையை தெளிவாக எடுத்து கூறினார்.

Similar News