பா.ஜ.க வின் 'அகண்ட பாரதம்' கொள்கையை பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய ஃபட்னாவிஸ்.!

பா.ஜ.க வின் 'அகண்ட பாரதம்' கொள்கையை பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய ஃபட்னாவிஸ்.!

Update: 2020-11-21 19:00 GMT

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஒரு நாள் கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அகண்ட பாரதம் கனவு நிச்சயம் நிறைவேறும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மும்பையில் நடந்த ஒரு சம்பவத்தில் சிவசேனா தொண்டர் ஒருவர் ஸ்வீட் கடையின் உரிமையாளரிடம் கடையின் பெயரில் இருந்து 'கராச்சி' என்ற வார்த்தையை நீக்குமாறு கேட்டுள்ளார்.

இது குறித்து  கருத்து கூறிய ஃபட்னாவிஸ், "நாங்கள் அகண்ட பாரதம் எனும் பிரிக்கப்படாத இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஒரு நாள் கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனக் கூறினார்.

முன்னதாக வியாழக்கிழமை, சிவசேனா கட்சி உறுப்பினர் ஒருவர், பாந்த்ராவில் உள்ள புகழ்பெற்ற கராச்சி ஸ்வீட்ஸ் உரிமையாளருக்கு அதன் பெயரை 'இந்திய' அல்லது 'மராத்தி' என்று மாற்றுமாறு வலியுறுத்தினார். இந்த சம்பவத்தால் தர்மசங்கடத்திற்கு சென்ற சிவசேனாவின் சஞ்சய் ராவத், இது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்பதை தெளிவுபடுத்தினார்.

"கராச்சி ஸ்வீட்ஸ் மற்றும் கராச்சி பேக்கரி ஆகியவை மும்பையில் 60 ஆண்டுகளாக உள்ளன. அவர்களுக்கு பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லை. இப்போது அவர்களின் பெயர்களை மாற்றுமாறு கேட்பதில் அர்த்தமில்லை. இது சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல"  என்று ராவத் கூறினார்.

பா.ஜ.க வின் மிக முக்கிய கொள்கைகளான ராமர் கோவில், ஆர்டிக்கிள் 370 ரத்து போன்றவை மத்திய பா.ஜ.க அரசால் எந்த வித சிக்கலும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.கவின்  தலைவர் ஒருவர் கட்சியின் கொள்கையான 'அகண்ட பாரதம்' குறித்து பேசியிருப்பது மற்ற கட்சிகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் அகண்ட பாரத கனவை நிறைவேற்றும் பணியில் மத்திய பா.ஜ.க அரசு இறங்க உள்ளதா? என அரசியல் வட்டாரங்களில் இதுகுறித்து ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Similar News