"துண்டு சீட்டு இல்லாமல் நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா?" - ஸ்டாலினுக்கு சவால் விடும் எடப்பாடி

"துண்டு சீட்டு இல்லாமல் நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா?" - ஸ்டாலினுக்கு சவால் விடும் எடப்பாடி

Update: 2021-01-07 06:15 GMT

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலையொட்டி "வெற்றி நடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரத்தை தமிழகத்தின் பல பகுதிகளில் செய்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். 

அப்போது பேசிய அவர், "தி.மு.க தலைவர் ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்கள் சபை என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி வருகிறார். மக்கள் சபையை நடத்தி எந்த மக்களுக்கு ஸ்டாலின் நல்லது செய்துள்ளார்?" எனக் கேள்வி எழுப்பினார். "தி.மு.கவினர் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்" எனவும் பேசினார்.

மேலும் பேசிய அவர், "பூத கண்ணாடியை வைத்து பார்த்தாலும் ஆட்சியில் குறை கண்டுபிடிக்க முடியாது. முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் வெறியுடன் செயல்படுகிறார். குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க முயல்கிறார். அடிப்படை வசதிகளை நிறைவேற்றியது அ.தி.மு.க அரசு. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூடிய கட்சி அ.தி.மு.க" என்றார்.

மேலும், "மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற இயக்கம் அ.தி.மு.க. கிராம பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளோம். கல்வி ஊக்கத்தொகை, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒருதாய் வயிற்றில் பிறந்த அண்ணணுக்கே துரோகம் இழைக்கும் ஸ்டாலின், மக்களை எவ்வாறு பாதுகாப்பார்? துண்டு சீட்டு இல்லாமல், கருத்து மோதலில் நேருக்கு நேர் மோதி பார்ப்போம்" என பகீரங்கமாக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

Similar News