அ.ம.மு.க.வில் சசிகலா இணைந்து கொள்ளலாமே.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

சசிகலா வேண்டும் என்றால் அமமுகவில் இணைந்து கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கலாம். அல்லது புதிய கட்சியை தொடங்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-28 13:14 GMT

சசிகலா வேண்டும் என்றால் அமமுகவில் இணைந்து கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கலாம். அல்லது புதிய கட்சியை தொடங்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா அமமுக கட்சி உறுப்பினர்களிடம் சமீப காலமாக செல்போன் மூலமாக உரையாடி அதன் ஆடியோவை வெளியிட்டு வருகிறார். இவரது பேச்சுக்களை அதிமுகவில் இருப்பவர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை. இருந்த போதிலும் தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவேன் என்று தினமும் யாரிடமாவது பேசி அதனை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.




 


இந்நிலையில், சசிகலா விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தனியார் செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுக பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் தொண்டர்களிடம் சசிகலா பேசுவதில்லை. அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களிடம் மட்டுமே பேசி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் நேற்று நடைபெற்றதாக கூறப்படும் அதிமுக கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே சசிகலாவை அதிமுகவில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஒட்டுமொத்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பின்னரும் அந்த முயற்சி எடுத்து வரும் சசிகலாவிற்கு அழகல்ல.




 


வேண்டும் என்றால் சசிகலா தனிக்கட்சியை தொடங்கி சுற்றுப்பயணம் செய்து வரலாம். அவரை யாரும் தடுக்க முடியாது. அதிமுக என்ற போர்வையில் வரக்கூடாது. மேலும், டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சி ஆரம்பிச்சு தேர்தலில் போட்டியிட்டார். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

அமமுக பொறுத்தவரையில் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் தனிக்கொள்கை வகுத்துக் கொள்ளலாம். திமுக மட்டுமின்றி யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்கொள்ளலாம்.

சசிகலா வேண்டும் என்றால் அமமுகவுக்கு தலைமை ஏற்று வழி நடத்தலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் டிடிவி தினகரன் ஒத்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக தினகரன் இருக்கிறார். அவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவர் அங்கு செயல்பட முடியும்.

அதே போன்றுதான் அதிமுகவில் சேர்ப்பதற்கு ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வேண்டும். அதிமுக பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டுவிட்டது. எனவே கட்சியில் நீக்குவதற்கு மற்றும் சேர்ப்பதற்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News