மக்கள் விருப்பப்பட்டால் மாநிலங்களை பிரிக்கலாம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன்.!

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2021-07-11 10:02 GMT

கடந்த சில நாட்களாக கொங்குநாடு விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்த திருநெல்வேலி பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் கூறும்போது, மக்களின் எதிர்பார்ப்பு அவ்வாறாக இருக்கும் பட்சத்தில் அதனை செய்ய வேண்டியது அரசின் கடமை என கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 


இதன் பின்னர் கொங்குநாடு பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் கூறும்போது: நமது ஊர் பக்கத்தில் வல்லநாடு உள்ளது. தேனி பக்கத்தில் வருஷநாடு உள்ளது. அதே போன்று மணப்பாறை பக்கள் வளநாடு உள்ளது. அதெல்லாம் மாநிலமாக பிரிக்கலாமா? எதற்கு அவர்களுக்கு பயம். பயமே தேவையில்லை எல்லாமே தமிழகம்தான்.

மேலும், ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆந்திரா இரண்டாக பிரிந்துள்ளது. உத்தரப் பிரதேசம் இரண்டாக பிரிந்துள்ளது. மாநிலங்கள் பிரிப்பது மக்களின் எதிர்பார்ப்பையும், நோக்கத்தையும் உணர்த்துகின்றது. 


ஒரு மாநில மக்களின் எதிர்பார்ப்பு அவ்வாறாக இருக்கும் பட்சத்தில் அதனை செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். கொங்குநாடும் தமிழகத்தில்தான் உள்ளது. அது அனைவருக்கும் தெரியும். திமுகவினர் ஒன்றிய அரசு என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அனைத்துமே குறுகிய கண்ணோட்டத்துடன் போய் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News