ஆட்சியையே கலைத்திருக்கலாம்! தி.மு.க அமைப்பாளர் திடீர் விளக்கம் - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேற்றம்!

ஆட்சியையே கலைத்திருக்கலாம்! தி.மு.க அமைப்பாளர் திடீர் விளக்கம் - காங்கிரஸ் கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேற்றம்!

Update: 2021-01-11 07:30 GMT

ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்று அக்கூட்டணியின் முக்கியக் கட்சியான திமுக திடீர் விளக்கத்தை இன்று தந்துள்ளது. "புதுச்சேரியில் ஆட்சியையே காங்கிரஸ் கலைத்திருக்கலாம்" என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதால் ஜனநாயகத்திற்கு எதிராகவோ, ஆளுநர் கிரண்பேடியின் அதிகார மமதைக்கோ திமுக ஆதரவு இல்லை. கிரண்பேடி ஜனநாயகத்தை முடக்குகிறார். அதனை காங்கிரஸ் சரியான வழியில் தட்டிக் கேட்கவில்லை என்ற வருத்தம் திமுகவுக்கு உள்ளது.

நியமன எம்எல்ஏக்களாக பாஜகவினரை ஆளுநர் நியமித்ததை எதிர்த்திருக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் மக்கள் அளிக்கும் தீர்ப்பைவிட, எந்த முடிவும் சிறந்தது இல்லை. ஆணித்தரமாக உணர்த்தும் வகையில் அப்போதே ஆட்சியை காங்கிரஸ் கலைத்திருக்கலாம்.

காங்கிரஸ் அப்படிச் செய்திருந்தால் மக்களால் தேர்வு செய்பவர்கள் மட்டுமே சட்டப்பேரவைக்குள் நுழைய முடியும் என உலகிற்கே சொல்லியிருக்கலாம். இதை காங்கிரஸ் அரசு செய்யவில்லை. மாறாக ஏற்க மறுத்த பாஜக நியமன எம்எல்ஏக்களுடன் ஆட்சியாளர்கள் கூடிக் குலாவினர்.

ஏற்கெனவே பல வழியில் சாகடிக்கப்பட்ட ஜனநாயகம் இந்தப் போராட்டத்தால் மீண்டும் உயிர் பெறுமா என்பது கேள்விக்குறிதான். ஆளுநரின் பதவிக்காலம் சொற்ப நாட்கள்தான். ஆளுநரை விரட்டினாலும், ஆட்சியில் உள்ள மிஞ்சிய காலத்தில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. எனவே, திமுகவின் 100 சதவீதக் கொள்கைக்கு ஏற்புடையதாக இருந்தாலும் காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்கவில்லை" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News