'லவ் ஜிகாத்'தைத் தடுக்க யோகி அரசு கொண்டு வரும் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

'லவ் ஜிகாத்'தைத் தடுக்க யோகி அரசு கொண்டு வரும் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Update: 2020-11-25 07:00 GMT

கடந்த சில வாரங்களாக பா.ஜ.க தலைமையிலான 5 மாநில அரசுகள், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் அஸ்ஸாம் ஆகியவை லவ் ஜிகாத்தினை கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்ற தங்களுடைய விருப்பத்தை அறிவித்தன.

முஸ்லிம் ஆண்களால், முஸ்லிம் அல்லாத பெண்கள் மதமாற்றம் என்ற ஒரே காரணத்திற்காக திருமணம் செய்ய கூடிய நிகழ்வுகள் தான் லவ் ஜிகாத் என்றழைக்கப்படுகிறது. 

அக்டோபர் 31ஆம் தேதி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு படி மேலே சென்று 'சகோதரிகள் மற்றும் மகள்களின் கௌரவத்துடன் விளையாடுபவர்கள்' எச்சரிக்கப்படுவதாகவும் இவ்வாறு நடந்து கொள்வதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர்களுடைய 'இறுதி ஊர்வலம்' நடத்தப்படும்' என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், உத்தரபிரதேச அமைச்சரவை தற்போது ஒரு புதிய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின்படி கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் நடந்ததாக விசாரணையில் தெரியவந்தால் அத்திருமணங்கள் செல்லாததாக அறிவிக்கப்படும். 

'விதி விருத் தர்மந்தரன் 2020' என்ற இந்த மசோதா, உத்தரபிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு அதன் சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அசல் வரைவு, 2019 நவம்பரில் உத்திரப்பிரதேசத்தின் சட்ட ஆணையத்தால் சமர்ப்பிக்கப்பட்டது.

 இந்த சட்டத்தில் என்ன இருக்கிறது?

 விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த சட்டத்தின்படி, திருமணத்தின் வாயிலாகவோ அல்லது மற்ற காரணங்களினாலோ செய்யப்படும் கட்டாய மதமாற்றத்திற்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த சட்டத்தின்படி ஒரு பெண் திருமணம் என்ற ஒரே காரணத்திற்காக மதம் மாறினால், அது குறித்து புகார் அளிக்கப்பட்டால், அந்த திருமணத்தைக் குறித்து ஒரு விசாரணை கண்டிப்பாக நடத்தப்படும். அந்த விசாரணையில் கட்டாய மதமாற்றம் அல்லது மற்ற தவறான விஷயங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த திருமணம் உடனடியாக செல்லாது என அறிவிக்கப்படும்.

இச்சட்ட விதிகளின்படி, மொத்தமாக மதம் மாற்றுவற்கு 10 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்கும். கட்டாய மதமாற்றம் ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாகவும் கருதப்படுகிறது. இந்த சட்டத்தின்படி கட்டாய மதமாற்றம் செய்யப்படும் அந்தப் பெண் மைனர் அல்லது SC, ST பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், சிறை தண்டனை இரண்டு முதல் ஏழு வருடங்களும், அபராதம் 25 ஆயிரமாகவும் உயரும். 

 திருமணம் செய்துகொள்ளும் மணமக்கள் தங்கள் மதம் மாற விரும்பினால், மாவட்ட மாஜிஸ்ட்ரேட் இடம் ஒரு மாதத்திற்கு முன்னதாக தாங்கள் திருமணம் செய்துகொள்ளவிருப்பதை தெரியப்படுத்த வேண்டும்.  இப்படி செய்யத் தவறுவது 6 மாதம் முதல் 3 வருடம் வரை சிறைத் தண்டனைக்கு வழிவகுக்கும்.

 'லவ் ஜிகாத்' ஒழிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறினாலும் இந்த சட்டத்தில் அப்படிப்பட்ட வார்த்தை எதுவும் இல்லை. உத்தரபிரதேச சட்ட ஆணையத்தின் பிரதிநிதிகள் கூறும்பொழுது, கலப்புத் திருமணங்களுக்கு இந்த சட்டம் எந்த தொந்தரவையும் அளிக்காது என்றும், எங்கே  மதமாற்றம் கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ அல்லது தூண்டப்பட்டதாகவோ இருந்தால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும் என்றும் விளக்கமளித்தனர்.

Similar News