யார் தலைவர்? காங்கிரஸ் கூட்டத்தில் சண்டை போட்டுக்கொண்ட MLAக்கள்.!

யார் தலைவர்? காங்கிரஸ் கூட்டத்தில் சண்டை போட்டுக்கொண்ட MLAக்கள்.!

Update: 2020-11-14 06:45 GMT

பொதுவாகவே காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. சமீபத்தில் கூட ராஜஸ்தானின் சச்சின் பைலட் - அசோக் கெலாட் பிரச்சினை சுமூகமாக முடிந்தாலும், மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கும் கமல் நாத்திற்கும் முடியவில்லை. இது உயர் மட்டத்தில். கீழ்மட்டத்தில் இன்னுமே அதிகமாக இருக்கும். நம்மூர் சத்தியமூர்த்தி பவனில் நடந்த சண்டைகள் நம் நினைவிற்கு வரலாம். 

பீகாரில் சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளில் RJD தலைமையிலான மகாகத்பந்தன் (MGB) தோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்ற கட்சிகளை போல் வெற்றி பெறாததே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. 70 இடங்களில் போட்டியிட்டு வெறும் 19 இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது. பீகார் தேர்தல் முடிவுகளுக்கு காங்கிரஸே காரணம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர் கூட ஒப்புக்கொண்டார்.

இது கடந்த முறை 2015 இல் 41 இடங்களில் போட்டியிட்டு 27 வெற்றி பெற்றதை விட மிகவும் குறைவாகும். இந்நிலையில் தோல்வியின் காரணங்கள் குறித்து ஆராய பாட்னாவில் அக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற கட்சி எம்எல்ஏக்களும், சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேந்தார் செகாலும் கலந்து கொண்டனர்.

 ஆனால் சிறிது நேரத்திலேயே அங்கு பிரச்சனை உருவானது. காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் சங்கர் துபெ மற்றும் மற்றொரு எம்எல்ஏ சித்தார்த் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் சலசலப்புக்கு காரணமானதாக ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 யார் காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் தலைவராக வேண்டும் என்ற விவகாரத்தில் தான் சண்டையே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 இது குறித்து பீகார் காங்கிரஸ் தலைவர் மதன் ஜா கூறுகையில், இது குறித்து தனக்கு தெரியாது என்றும் இவ்விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்பது குறித்தும் அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மற்றொருவர் நேற்றுதான் தங்களை சந்தித்ததாகவும் கூறினார்.

Similar News