ஆளுநர் தமிழிசை கூறிய "இந்திய ஒன்றியம்" என்ற வார்த்தை திரிக்க கூடாது - மக்கள் தொடர்பு அதிகாரி அறிக்கை!

Update: 2021-06-29 07:00 GMT

ஆளுநர் தமிழிசை கூறிய "இந்திய ஒன்றியம்" என்ற வார்த்தை திரிக்க கூடாது என புதுச்சேரி மக்கள் தொடர்பு அதிகாரி அறிக்கை விடுத்துள்ளார். அது பின்வருமாறு:

"நேற்றைய முன் தினம் (27-06-2021) புதுச்சேரி வரலாற்றில் குறிக்கப்பட்ட நாள். மாண்புமிகு முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி அவர்களின் தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நாள். மாண்புமிகு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் புதிய அமைச்சர்களுக்கு தமிழில் பதவிப்பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அமைச்சர் ஒருவர் பதவியேற்ற பெருமைமிகு நிகழ்வு நடந்தேறியது.

அத்தகைய பெருமைமிகு நிகழ்வில் அரசியலமைப்பு சட்டத்தின்படி, பல ஆண்டு காலமாக புதுச்சேரி அரசால் மரபாக பயன்படுத்தப்பட்ட தமிழ் உறுதிமொழி படிவத்தில் எந்த மாறுதலும் இல்லாமல் தமிழில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்த பெருமையை மறைக்கும் அளவிற்கு "இந்திய ஒன்றியம்" என்ற வார்த்தை வேண்டுமென்றே திரித்து கூறப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு என்ற சொல் எங்கும் பயன்படுத்தவில்லை. ஆனால் ஒன்றிய அரசு என்று துணை நிலை ஆளுநர் கூறினார் என்று பொத்தாம்பொதுவாக கருத்து தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறு தமிழக அமைச்சர்கள் பதவியேற்கும்போது தமிழக அமைச்சர்களாக பதவியேற்கிறோம் என்று கூறினார்களோ அதேபோல் "Indian Union Territory of Pudhucherry" என்ற வாசகம் "இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சிப்பரப்பு" என மிக அழகாக, வெகுகாலத்திற்கு முன்பே புதுச்சேரி தமிழறிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த படிவம்தான் வெகுகாலமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து அதன் பின்பு இந்திய ஆட்சிக்கு உட்பட்டதால் அதை "Indian Union Territory" என்கிறார்கள். அதாவது "இந்திய ஒன்றிய ஆட்சிப்பரப்பு ".

அதனால்தான் ஒன்றியம் எனக் குறிப்பிடுவது Union Territory என்ற யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத்தான். இங்கு எங்கேயுமே மத்திய அரசு என்று குறிப்பிடப்படவில்லை. அதனால் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறியதாக திரித்துக்கூறுவது கண்டிக்கத்தக்கது.

புதுச்சேரி இந்திய அரசின் ஆளுமைக்குட்பட்டு இருக்கும் நிலப்பரப்பு. அதனால் இந்திய ஒன்றிய புதுச்சேரி நிலப்பரப்பு என்று சொல்கிறோமே தவிர இந்திய தேசத்திற்கான மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா அங்கே நடைபெறவில்லை.

ஆக மாநில அரசுகளின் பதவியேற்பு விழா படிவத்தில் மத்திய அரசு என்ற வார்த்தை இடம் பெறாது. அவ்வாறு இருக்கையில் புதுச்சேரியில் மட்டும் ஒன்றிய அரசு என்று சொல்லப்பட்டது என்று சொல்வது உள்நோக்கம் கொண்டது. ஆகவேதான் இந்த விளக்கம் தேவைப்படுகிறது.

தமிழ் மண்ணில் தமிழில் பதவியேற்ற பெருமையை நிலைநிறுத்த வேண்டும். ஆனால் அதன் மாண்பை மறைக்கும் அளவிற்கு தவறாக இந்த ஒன்றியம் என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. சில தேவையற்ற சலசலப்புகளால் பலரது தியாகத்தால் உருவான பலமான இந்திய இறையாண்மையைக் குலைக்க முயல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது."

Similar News