ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மீட்க ஆளுநரிடம் பா.ஜ.க. மனு!
பெத்துசெட்டிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி ஆளுநரிடம் புதுச்சேரி பாஜகவினர் மனு அளித்துள்ளனர். புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்து செட்டிப்பேட்டை சித்தி விநாயகர் சிவசுப்ரமணிய சுவாமி கோயில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
அப்போது பாஜக மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., மற்றும் ஊர் பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பெத்துசெட்டிப்பேட்டை கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான செல்லிமேடு மைதானத்தை சமூக விரோதிகள் ஆக்கிரமித்துள்ளனர். எனவே அந்த இடத்தை மீட்டுத்தர வேண்டும்.
மேலும், காந்தி நகர், மற்றும் வள்ளலார் நகர் மக்கள் பயன்படுத்துகின்ற வகையில் நூலகம், பூங்கா, விளையாட்டு திடலாக மாற்றிக்கொடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆளுநர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Dinamalar
Image Courtesy: Vikatan