புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உலகளாவிய முதல் 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தால் தொகுக்கப்பட்டு, எல்சேவியரால் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டிற்கான முதல் 2 சதவீத விஞ்ஞானிகளின் உலகளாவிய தரவரிசையில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் பதினாறு பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த தரவரிசைப் பட்டியல் பேராசிரியர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கை, மேற்கோள்கள் மற்றும், ஆராய்ச்சியின் தாக்கம் உட்பட பல்வேறு அளவு கோல்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
'ஸ்டான்போர்ட் பட்டியல்' என்று குறிப்பிடப்படும் இந்த தரவரிசை 2019 ஆம் ஆண்டில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழுவுடன் இணைந்து எல்சேவியரால் தொடங்கப்பட்டது. இது உலகளவில் உள்ள விஞ்ஞானிகளின் செயல்திறனை மதிப்பிடுகிறது, அவர்களில் மிகச்சிறப்பான 2 சதவிகித ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிக்கிறது. இந்த உலகளாவிய பட்டியலில் அங்கீகாரம் பெற்ற புதுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் தங்கள் ஆராய்ச்சித் துறைகளில் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். முனைவர். ராஜீவ் ஜெயின், முனைவர். எஸ்.ஏ. அப்பாஸி, முனைவர். கே. போர்சேசியன், முனைவர். தஸ்னீம், முனைவர். நடராஜன் சக்திவேல் ஆகியோர் இந்த 2 சதவிகித பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
புதுவைப் பல்கலைக்கழகத்துக்கும், ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இந்த சாதனை அமைந்துள்ளது. புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் சிறப்புமிக்க ஸ்டான்போர்ட் பட்டியலில் இடம்பெற்ற 16 பேராசிரியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: News