'புதுச்சேரியை வளர்ச்சி பெற்ற மாநிலமாக்க இணைந்து செயல்படுவோம்' : Dr. தமிழிசை உறுதி!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் புதுச்சேரியின் முதலமைச்சராக கடந்த மாதம் என்.ஆர். காங்கிரஸை சேர்ந்த ரங்கசாமி பதவியேற்று கொண்டார். இந்த நிலையில் புதுச்சேரியின் சபாநாயகராக பா.ஜ.க வை சேர்ந்த ஏம்பலம் செல்வம் சட்டமன்றத்தில் நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துணை நிலை ஆளுநர் Dr. தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தேநீர் விருந்து அளித்தார்.
இந்த விருந்தில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க. மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ க்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து Dr. தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் "புதுச்சேரி ராஜ்நிவாஸில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் திரு.ந.ரங்கசாமி, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.செல்வம் மற்றும் 15-வது சட்டப்பேரவையின் உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி மாநிலத்தை அனைத்து வகையிலும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாக்க இணைந்து செயல்படுவோம்." என்று அவர் கூறினார்.