3வது அலை : முன்னெச்சரிக்கையாக கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த Dr. தமிழிசை!
தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்து வரும் நிலையில், மூன்றாவது அலை பரவல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இவ்வாறு இருக்கையில் புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில், கொரோனா சிகிச்சை மையத்தை துணை நிலை ஆளுநர் Drதமிழிசை சவுந்தரராஜன் இன்று திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது "கொரோனா மூன்றாவது அலை பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 60 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தேன்.மேலும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவலின் போது குழுந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவ்வாறு குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் உள்ள காலாப்பட்டு MOH பரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு பதிவு மையத்தில் ஆய்வு செய்தார். பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத் காப்பிட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 1,77,366 தனி நபர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60,320 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும் அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பொருட்களை தமிழிசை சௌந்தர்ராஜன் வழங்கினார்.