புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜினாமா.. நாராயணசாமி அரசுக்கு சிக்கல்.!
புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜினாமா.. நாராயணசாமி அரசுக்கு சிக்கல்.!
புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் புதுவையில் நமச்சிவாயம் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். அவருடன் மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென தனது எம்.எல்.ஏ. பதவியையும் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்துவுக்கு மல்லாடிகிருஷ்ணராவ் அனுப்பினார். ஏற்கெனவே பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஒரு தொகுதி காலியாக இருந்தது. தொடர்ந்து நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடிகிருஷ்ணாராவ் என காங்கிரசில் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் பலம் 11 ஆக குறைந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 11, தி.மு.க. 3, அரசுக்கு ஆதரவு தரும் சுயேச்சை ஒருவர் என 15 பேர் உள்ளனர். எதிர்கட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4 என 11 பேர் உள்ளனர். பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் சேர்த்தால் எதிர்கட்சியில் 14 பேர் உள்ளனர். தற்போது புதுவை சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 29 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 15 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால் மெஜாரிட்டியுடன் ஆட்சியை தொடரலாம். தற்போது வரையில் காங்கிரசுக்கு 15 பேர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேரடியாக சபாநாயகர் சிவக்கொழுந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். இதனால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆட்சி தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது 14 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியில் உள்ளார் நாராயணசாமி என்பது குறிப்பிடத்தக்கது.