புதுச்சேரி பொறுப்பு ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்ததை தொடர்ந்து அவரது செயல்பாடுகள் பற்றிய தொகுப்பு நூல் வெளியிடுகின்ற விழா நேற்று (பிப்ரவரி 18) ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று ஓராண்டு செயல்பாடுகள் பற்றிய தொகுப்பு நூலை வெளியிட்டு பேசியதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கும் அரசுக்கு இருக்கின்ற அதிகாரம் என்ன? ஆளுநரின் அதிகாரம் என்ன என்று தனக்கு நன்றாக தெரியும். இது ஆளுநர் மாளிகை இல்லை. ஆளுநரின் அலுவலகம்தான்.
மேலும், மக்களுக்கு எந்தெந்த வகையில் நல்லது செய்ய முடியும் என்கின்ற அடிப்படையிலேயே கோப்புகளுக்கு முடிவு எடுக்கப்படுகிறது. எனவே ஆளுநர் மாளிகையில் எந்த ஒரு கோப்பையும் தாமதப்படுத்துவது இல்லை. அது மட்டுமின்றி ஆளுநர் அலுவலகம் வெளிப்படை தன்மையாக நடந்து கொள்கிறது. மேலும் அதிகாரமுள்ள பதவியிலும் அரசியலிலும் நான் தூய்மையை கடைப்பிடித்து வருகிறேன். கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் புதுச்சேரி மக்கள் பாதிப்படைந்தபோது விஞ்ஞானப்பூர்வமான முறையில் கொரோனாவை அணுகியிருக்கிறோம். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டலாம். இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: Daily Thanthi