புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் புதுவைக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மகாகவி பாரதியார் நினைவு இல்லம் அமைந்துள்ளது. இதனை அரசுடையமையாகி சுமார் 50 ஆண்டுகள் முடிவடைகிறது.
இந்நிலையில், பொன்விழா காணும் இந்த இல்லத்தின் சிறப்பு பற்றி பார்ப்போம்: 1882ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்தவர் சுப்பிரமணியன். இவர் சிறு வயது முதலே தமிழ் மீது மிகுந்த பற்றுடையவராக இருந்தார். இதனால் தனது ஏழு வயதில் கவிதை எழுத தொடங்கினார். இதற்கிடையில் எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் இவருக்கு பாரதி என்ற பட்டத்தை சூட்டினர்.
இதன் பின்னர் 1897ம் ஆண்டு செல்லம்மா என்பவரை பாரதியார் திருமணம் செய்து கொண்டார். பாரதியார் எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றினார். அதனை தொடர்ந்து பத்திரிகை ஆசிரியராகவும், மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றினார். அந்த சமயத்தில் சுதந்திர போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தான் பணியாற்றும் பத்திரிகைகளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கருத்தை வெளியிட்டு வந்தார். இதனால் அவரை கைது செய்ய ஆங்கிலேயே அரசு முடிவு செய்தது. இதில் இருந்து தப்பிக்க நண்பர்களின் ஆலோசனைப்படி கடந்த 1908ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுச்சேரிக்கு சென்றார்.
இந்தியா பத்திரிகையை புதுச்சேரிக்கு மாற்றி தனது பணியை தொடங்கினார். அங்கு பல்வேறு கவிதை மற்றும் பாடல்களையும் எழுதினார். அதன் பின்னர் 1918ம் ஆண்டு பாரதியார் புதுவையை விட்டு வெளியேறி கடலூருக்கு சென்றபோது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தன்னுடைய சிறுவயது முதல் கவிதை மற்றும் எழுத்துக்களினால் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது சுதந்திர கனலை மூட்டிய பாரதியார் சென்னையில் 1921ம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று 38 வயதில் காலமானார்.