மத்திய அரசு புதுவைக்கு சுமார் ரூ.700 கோடிக்கு அதிகமாக சலுகைகள் வழங்கியுள்ளது ! - ஆளுனர் தமிழிசை !
Pondicherry News.
புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது :
கொரோனாவை எதிர்கொள்வதில் தடுப்பூசி முக்கியமான ஒன்றாகும். அதனை மக்களிடம் சேர்க்க அரசு சார்பில் தடுப்பூசி திருவிழாக்கள், பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக 41 கிராமங்களில் முழுமையான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 70 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். சிலர் தடுப்பூசி போட தயங்குகின்றனர்.
100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக புதுச்சேரி மாற இந்த விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் உறுதுணையாக இருக்கும். பள்ளிகள் விரைவில் திறக்கப்பட இருப்பதால் ஆசிரியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் யாராவது ஒருவர் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்கள் மூலம் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கவும், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தவும், கொரோனாவை எதிர்கொள்ளவும் சுகாதார துறைக்கு அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். மத்திய அரசு புதுவைக்கு சுமார் ரூ.700 கோடிக்கு அதிகமாக சலுகைகள் வழங்கியுள்ளது.
பட்ஜெட் எல்லாவிதத்திலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இந்த திட்டங்கள் அனைத்தும் செம்மையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வளர்ச்சி கண்ட புதுவையாக மாறும். அதற்கு அனைத்து வகையிலும் அரசுக்கு கவர்னர் என்ற முறையில் நான் உறுதியாக இருப்பேன்.
இவ்வாறு புதுவை ஆளுநர் நிருபர்களிடம் பேசினார்.
Image : Hans India