புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் : கவர்னர் தமிழிசை ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் !
Pondicherry Budget
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
சபாநாயகர் இருக்கையில் இருந்து கவர்னர் தமிழிசை தமிழில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் மூலம் மேன்மை மிகு அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் நான் முதலில் வாழ்த்துகிறேன். 15-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் தொடக்க உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுவை ஆட்சிப்பரப்பு மக்களின் வளர்ச்சிக்கு குறிப்பாக, சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு ஒவ்வொருவரும் கடினமாக பாடுபடுவீர்கள் என நம்புகிறேன். சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 2021 சுதந்திரமாகவும், நியாயமான முறையில் நடத்தப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி, பாராட்டுக்கள்.
தேர்தல் அமைதியாக நடந்திட அரசு எந்திரத்துக்கு ஒத்துழைப்பு அளித்த புதுவை மக்கள், அரசியல் கட்சியினர் பாராட்டுக்குரியவர்கள்.
புதுவை மக்கள் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்ததன் மூலம் இதற்கு முன்னர் அவரின் தலைமையில் இயங்கிய அரசு செயல்படுத்திய மக்கள் நல கொள்கை, திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
புதிய அரசு வளர்ச்சி, வளம், மாநிலத்தின் அமைதி ஆகியவற்றில் சிறந்து விளங்க பாடுபடும் என உளமார நம்புகிறேன். இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை கொரோனா பரவல் காரணமாக, 2-வது அலையின்போது பெருமளவு உயிர் சேதம் ஏற்பட்டது. இது புதுவையிலும் எதிரொலித்தது. அரசு துரிதமாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தியது.