புதுச்சேரி : காவலர் தகுதித் தேர்வில் முறைகேடு? தற்காலிகமாக நிறுத்திய ஆளுநர்.!

புதுச்சேரி : காவலர் தகுதித் தேர்வில் முறைகேடு? தற்காலிகமாக நிறுத்திய ஆளுநர்.!

Update: 2020-10-30 16:34 GMT

புதுச்சேரியில் காவல்துறை உடல்தகுதி தேர்வு நடத்தும் முறைகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் இந்த தகுதித் தேர்வினை உடனடியாக நிறுத்தும்படி ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உடற்தகுதி தேர்வு சம்பந்தப்பட்ட கோப்புகளை தன்னிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுச்சேரியில் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காவலர்களுக்கான காலிப் பணியிடங்கள் தற்போதுவரை நிரப்பப்படாமல் உள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் வேலைவாய்ப்பு குறைவாக இருக்கும் சூழ்நிலையில் இந்தத் தேர்வினை நடத்தாமல் இருப்பதால் தேர்வு நடத்தக் கோரி மக்கள் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.





இந்நிலையில் இந்த காவலர் தகுதி தேர்வுக்கான உடல் தகுதி தேர்வு நவம்பர் 4-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த தேர்வைப் பற்றி பல்வேறு சந்தேகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து புதுச்சேரி ஆளுநர் தலைமை செயலாளருக்கு ஒரு உத்தரவினை பிறப்பித்திருந்தார். அதில் 'தனியார் மென்பொருள் நிறுவனங்கள் மூலம் மின்னணு பட்டையை அணிந்து ஓட்ட தேர்வுகள் நடைபெற வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் இன்னும் பழைய முறையிலேயே ஓட்ட தேர்வுகள் நடைபெறுவது ஏன்' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனால் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் ஏற்படும் என்று மக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். அதேபோல் உடல் தகுதித் தேர்வு நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள சில பகுதிகளில் 400 மீட்டர் ஓட்டத் தேர்விற்காண ட்ராக்குகள் இல்லாத நிலையில் எவ்வாறு அங்கு தகுதித் தேர்வு நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பி மக்கள் ஆளுநரிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்தத் தேர்வுகள் தகுதி வாய்ந்த காவலர்களை தேர்வு செய்வதற்கானவை என்பதால் இதில் அனைத்து அரசு விதிகளும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்ற நிலையில் இதுகுறித்து தேர்வாணையம் திருப்திகரமான பதில் அளிக்கும் வரை தற்காலிகமாக இந்த காவலர் தகுதித் தேர்வு முறையை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்தார். மேலும் இது சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தையும் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

Similar News