புதுச்சேரியில் செப்டம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு !
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக வருகின்ற 30ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.;
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக வருகின்ற 30ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் வருகிறது.
அதன்படி 14ம் தேதி இரவு ஊரடங்கு முடிவடையும் நிலையில், மேலும் இந்த ஊரடங்கை வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வரை நீடித்து அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதுவை அரசு செயலர் அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலத்தில் வருகின்ற 30ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது.
இதில் கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். மேலும், எல்லா விதமான கடைகளுக்கும் கூடுதலாக ஒரு மணி நேரம் வரை திறந்திருக்க தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காய்கறி மற்றும் பழக்கடைகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம்.
வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவை காலை 9 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கலாம். இவைகள் இதற்கு முன்பாக இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை திறந்திருக்கலாம்.
மேலும், டீ கடைகள், ஜூஸ் கடைகளும் இரவு 11 மணி வரை திறந்திருக்கலாம். மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி.
கடற்கரை மற்றும் பூங்காக்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi