தங்கத் தேர் பாகங்களைக் காணவில்லை - மணக்குள விநாயகர் கோவிலில் அதிர்ச்சி.!

தங்கத் தேர் பாகங்களைக் காணவில்லை - மணக்குள விநாயகர் கோவிலில் அதிர்ச்சி.!

Update: 2020-12-16 06:30 GMT

புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான தங்கத்தேரில் உள்ள பாகங்கள் காணாமல் போயுள்ளதாக கோவில் பாதுகாப்பு குழு நிர்வாகி ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் அளித்துள்ளார். புதுச்சேரியின் முக்கியமான அடையாளமான இந்தக் கோவிலில் உள்ள தேர் பாகங்களை மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமாக தங்கத் தேர் உள்ளது. இருப்பினும் 1989ஆம் ஆண்டு நந்திகேஸ்வரர் கோவிலிலிருந்து புதிதாக ஒரு தங்கத் தேர் மணக்குள விநாயகர் கோவிலுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கோவிலில் உள்ள தங்கத்தேரின் பாகங்களைக் காணவில்லை என்று கோவில் பாதுகாப்பு கமிட்டி ஆளுநர் கிரண்பேடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் உள்ள தேரில் உள்ள சிற்பங்கள் மற்றும் அடிப்புறத்தில் உள்ள பாகங்கள் காணாமல் போயிருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி காணாமல் போன பாகங்களை மீட்டு கோவிலில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

கோவில் நிர்வாகத்தின் பொறுப்பிலுள்ள தங்கத்தேரில் உள்ள பாகங்கள் காணாமல் போயிருப்பதால் இதற்கு கோவில் நிர்வாகத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா அல்லது அங்கு பணிபுரியும் ஊழியர்கள் எவரேனும் தேரின் பாகங்களை திருடி சென்றுள்ளனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தங்கத்தேரில் உள்ள பாகங்கள் காணாமல் போய் இருப்பது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பழமையான தேர்கள் சிதிலமடைந்து விட்டதாகக் கூறி அறநிலையத்துறை புதிய தேர்கள் செய்வதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பழைய தேர்களை கள்ளச் சந்தையில் விற்பதற்குத் தான் இவ்வாறு அதிகாரிகள் முறைகேடான செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் தங்கத் தேரின் பாகங்களைக் காணவில்லை என்று குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: https://tamil.news18.com/news/national/puducherry-manakula-vinayagar-temple-golden-chariot-parts-theft-skv-ela-380447.html

Similar News