ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் மத்திய குழுவினர் சந்திப்பு!
மழை வெள்ளத்தால் புதுச்சேரி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் தொலைநோக்கு திட்டத்தோடு தீர்வு காண வேண்டும் என்று மத்திய குழுவிடம், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
மழை வெள்ளத்தால் புதுச்சேரி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் தொலைநோக்கு திட்டத்தோடு தீர்வு காண வேண்டும் என்று மத்திய குழுவிடம், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அது மட்டுமின்றி விவசாய பயிர்களும் சேதமடைந்தது. இதனால் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய குழுவினர் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினர். அப்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய குழுவினருடன் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் பெய்து வந்த கனமழையால் விவசாயிகளும், மீனவர்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளது.
மேலும், விவசாய பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரால் கொசு அதிகமாகி, மலேரியா நோய்கள் பரவிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு மருத்துவராக எனக்கு இது மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது.
மேலும், புதுச்சேரியில் உள்ள அதிகாரிகள் இரவு நேரங்களிலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து உணவுகளை வழங்கி வருகின்றனர். பலரது வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் குழந்தைகள் உட்பட பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி புதுச்சேரி கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் புயலாலும், கடுமையான மழை வெள்ளத்தாலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதற்கு ஒரு தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியாகும். இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Daily Thanthi