என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., கூட்டணியில் எவ்வித குழப்பங்களும் இல்லை. இந்த அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான புகார்களை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறி வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று (ஜூலை 11) மாலை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் டி.ஜி.பி., ரன்வீர் சிங் கிறிஸ்னியா, கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் மோகன், ஐ.ஜி., சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்துவது போன்றவைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கூட்டணியில் குழப்பம் இல்லை. சட்டம், ஒழுங்கு பிரச்சனை மற்றும் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்துவது, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்படுவது போன்ற அறிவுரைகள் போலீசாருக்கு வழங்கப்பட்டது.
மேலும், பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவே ஆளுநரை நாங்கள் சந்தித்தோம். முதலமைச்சருக்கும் எங்களுக்கு எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணி அரசில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசி வருகின்றார். நானும் அரசியலில் இருக்கிறேன் என்று காண்பிப்பதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Daily Thanthi