உக்ரைனில் படிக்கும் காரைக்கால் மாணவர் குடும்பத்துடன் அமைச்சர் சந்திப்பு!
உக்ரைனில் படித்து வரும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தினரை புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சந்தித்து பேசி வருகின்றார். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வரும் நிலையில், அங்கு இந்திய மாணவர்கள் பல ஆயிரம் பேர் படிக்க சென்றுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அது போன்று உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்துச் சென்று விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
அதே சமயம் இன்னும் மீட்கப்படாத மாணவர்களின் குடும்பத்தினரை மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். விரைவில் மாணவர்களை மீட்டு விடுவோம் என்ற உத்தரவாதத்தையும் அளித்து வருகின்றனர். அதே போன்று புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பி.எஸ்.ஆர். நகரைச் சேர்ந்த கார்த்தி விக்னேஷ், சிவசங்கரி, பிரவினா, கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த சந்துரு உள்ளிட்ட 4 பேர் உக்ரைனில் படித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் அங்கு போர் நடைபெற்று வருவதால் மாணவர்களை மத்திய அரசு வேகமாக மீட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டில் படித்து வரும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தாரை புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சந்தித்து பேசியுள்ளார். மாணவர்களை விரைவில் மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக பெற்றோர்களிடம் அமைச்சர் கூறியுள்ளார். இதனால் அனைவரும் தைரியாக இருக்க வேண்டும் என்றார்.
Source, Image Courtesy: Hindu Tamil