நாராயணசாமி பதவி விலக வேண்டும்: எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை.!
நாராயணசாமி பதவி விலக வேண்டும்: எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை.!
புதுச்சேரி நாராயணசாமி தலைமையிலானா காங்கிரஸ் அரசுக்கு போதுமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாமல் இருப்பதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்த 33 பேர் இருப்பார்கள். வேறு கட்சிக்கு சென்றதாக பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. இதனிடையே பாஜகவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணாரார் மற்றும் ஜான்குமார் தங்களது எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்தனர்.
தொடர்ந்து 4 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினமா செய்ததால் புதுச்சேரி அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு அமைக்க வேண்டிய எண்ணிக்கை குறைந்ததால் நாராயணசாமி உடனடியாக தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில், புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு இன்று எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் ஆகியோர் வந்தனர். இதனைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், எம்எல்ஏ செல்வகணபதி, ஏம்பலம் செல்வம் ஆகியோரும் வந்தனர்.
இதன்பின்னர் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வந்தார். அனைவரும் ஒன்றாக ஆலோசனை நடத்திவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் ரங்கசாமி பேசியதாவது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்துள்ளதால் போதுமான மெஜாரிட்டியை நாராயணசாமி இழந்து விட்டார். எனவே அவர் உடனடியாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினார். அவரது கருத்தை மற்றவர்களும் ஆதரித்து பேசினார்.