புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்று: ஓட்டல் நிர்வாகிகளுக்கு போலீசார் அறிவுரை!
புத்தாண்டை கொண்டாடுவதற்காக புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழை கேட்டு பெற வேண்டும் என்று ஓட்டல் நிர்வாகிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
புத்தாண்டை கொண்டாடுவதற்காக புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழை கேட்டு பெற வேண்டும் என்று ஓட்டல் நிர்வாகிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆங்கில புத்தாண்டு வருகின்ற சனிக்கிழமை வருகிறது. இதனால் பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்வது வழக்கம். அதே போன்று புதுச்சேரி மாநிலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாட்டி வதைக்கும் கொரோனா தொற்றால் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின்படியே புத்தாண்டு கொண்டாடுவதற்கு பல்வேறு மாநிலங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முழு தளர்வுகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகின்றனர். அது போன்று புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஓட்டல்களில் தங்குவது வழக்கம். இதனால் பல ஓட்டல்கள் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீனியர் போலீஸ் எஸ்.பி. லோகேஷ்வரன் தலைமையிலான போலீசார் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனை நடத்தினர். அப்போது வெளிமாநிலங்களில் இருந்து வருபவரகள் தடுப்பூசி போட்டுக்கொண்டனரா? என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர்களிடம் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களை வாங்கி சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி தடுப்பூசி போடவில்லை என்றால் கொரோனா இல்லை என்ற சான்றிதழ்களையும் வாங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
Source, Image Courtesy:Daily Thanthi