பெண்களுக்கு 5 லட்சம் கடன்.. பாரதியாருக்கு 150 அடி உயரத்தில் சிலை.. புதுச்சேரியில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு.!

30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.

Update: 2021-03-26 08:05 GMT

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. அதே போன்று கேரளா, புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

அங்குள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.

தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

அதில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாவது: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த மாபெரும் ஆடை உற்பத்தி தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்படும். புதுச்சேரிக்கு என்று தனி பள்ளிக் கல்வி தேர்வாணையம் உருவாக்கப்படும்.

கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.

விண்ணப்பித்த 15 நாள்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். பெண்களுக்கு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசம்.

புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்படும். எந்த ஆன்மிக வழிபாட்டுத் தலங்களும் அரசால் நிர்வாகிக்கப்படாது

பாரதியாருக்கு 150 அடி உயரத்தில் சிலை நிறுவப்படும், உயர்க்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் இலவசமா வழங்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இன்னும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

Similar News