புதுச்சேரி முதலமைச்சராக என்.ரங்கசாமி பதவியேற்றார்.. ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடந்த விழா.!
புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் கைப்பற்றியது. இதன் மூலம் இந்த கூட்டணி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டது.
என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கொடுத்தார். மேலும், பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார்.
இதனையடுத்து கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆட்சி அமைக்க வருமாறு ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கொரோனா தொற்று காரணமாக எளிமையாக ஆளுநர் மாளிகையில் விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.