நீட், ஜே.இ.இ. தேர்வுகள் எழுத கல்வித்துறை மூலம் புதுச்சேரி மாணவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் நமச்சிவாயம்!
நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் எழுதுவதற்கு கல்வித்துறை மூலமாக மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் என்று புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் வட தமிழகத்தின் 27வது மாநில மாநாடு விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் கவுசிக் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது: நான் பாஜகவை எதிர் அணியில் இருந்தபோதில் இருந்து பார்த்து வருகிறேன். இந்த கட்சியில் இணைந்த பின்னர்தான் எவ்வாறு ஒரு அமைப்பு கட்சியை வழிநடத்துகிறது என்பது எனக்கு தெரிந்தது. மேலும், இந்திய நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்னர் இரவு, பகலாக சேவையாற்றி வருகிறார். அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே ஒரு நாடு முன்னேற்ற அடையும். தற்போது நாட்டை சுயசார்புடைய நாடாக மாற்றுவதற்கு பிரதமர் மோடி பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொள்கிறார்.
மேலும், புதுச்சேரி கல்வித்துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இதில் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்வதற்கு கல்வித்துறை மூலமாக மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும். இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.
Source: Daily Thanthi
Image Courtesy: Deccan Herald