புதுச்சேரியில் விடுதி ஒன்றில் 12 பவுன் நகை திருடிய வழக்கில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த இளம்பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரத்தை சேர்ந்தவர் மாதவி, இவர் புதுச்சேரி தன்வந்திரி நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வருகின்றார். இவருடன் புதுச்சேரி காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த பிரீத்திகா 21 உட்பட 4 பேர் தங்கியிருந்தாக கூறப்படுகிறது. பிரீத்திகா தனது பெற்றோருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் சேர்ந்துள்ளார். இவர் தமிழ்நாடு பெண் போலீஸ் தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். அதற்காக வருகின்ற 1ம் தேதி பயிற்சியில் சேர வேண்டும்.
இந்நிலையில், மாதவி 12 பவுன் நகைகளை கழற்றி பெட்டியில் வைத்துள்ளார். காலை எழுந்து பார்த்தபோது பெட்டியில் இருந்த 12 பவுன் நகைகள் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து மாதவி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து மாதவியுடன் தங்கியிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பிரீத்திகா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புகொண்டார். மேலும், தான் மறைத்து வைத்திருந்த நகைகளை போலீசாரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Source,Image Courtesy: Daily Thanthi