ஹிஜாப் அணிய தடை: சீருடை கட்டுப்பாட்டை கல்வித்துறை நிர்ணயிக்கும்! ஆளுநர் தமிழிசை தகவல்!

புதுச்சேரி பள்ளிகளில் மாணவர்கள் அணியும் சீருடை கட்டுப்பாட்டை கல்வித்துறை நிர்ணயம் செய்யும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-10 14:14 GMT

புதுச்சேரி பள்ளிகளில் மாணவர்கள் அணியும் சீருடை கட்டுப்பாட்டை கல்வித்துறை நிர்ணயம் செய்யும் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பாக சுடுமண் சிற்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் கலந்து கொண்டு சுடுமண் சிற்ப பூங்காவை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் அறிவிப்பிலும் சுற்றுலா திட்டங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சுற்றுலாத் துறையை மேம்படுத்த சில திட்டத்தின் வரைவுகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சில திட்டங்கள் நமக்கு கிடைக்கும். இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். இதனால் மாநிலத்தின் பொருளாதாரமும் உயரும் என்றார்.

மேலும், புதுச்சேரியில் கலை மற்றும் கைவினை கிராமத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் களிமண் சிற்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் களிமண் சிற்பத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இது புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை. பத்மஸ்ரீ விருது பெற்ற கலைஞர் முனுசாமி அதனை முன்னெடுத்து வருகிறார். பெரிய, பெரிய வீடுகளில் சுடுகளிமண் சிற்பங்களை வைத்தால் கலைஞர்களுக்கு மாபெரும் உதவியாக அமையும். அதே போன்று ஆளுநர் மாளிகை வளாகத்திலும் களிமண் சிற்பம் வைக்கலாம் என தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் ஹிஜாப் அணியும் பிரச்சினை எழுந்துள்ளது. அதே போன்று புதுச்சேரியில் பள்ளி மாணவி ஒருவர் பர்தா அணிந்து வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளதே?

அதற்கு ஆளுநர் தமிழிசை பதில்: புதுச்சேரி மாநிலத்தில் சீருடையை பொறுத்தவரைக்கும் பள்ளிக் கல்வித்துறைதான் முடிவு செய்யும். சீருடை கட்டுப்பாட்டையும் கல்வித்துறையே நிர்ணயம் செய்யும். இவ்வாறு அவர் கேள்வி பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

Source,Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News