உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களுக்கு சென்று வேலை செய்யும் திறமையை வளர்க்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி!
புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் சென்று வேலை செய்யும் வாய்ப்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார். உயர் கல்வி கண்காட்சி புதுச்சேரி அரசு தொழிலாளர் துறையின் வேலை வாய்ப்பகம் சார்பாக கடற்கரை சாலையில் உயர் கல்வி கண்காட்சி நடைபெற்று வருகிறது.
அதன் தொடக்க விழா நேற்று (ஜூலை 1) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை வகித்தார். விழாவுக்கு தொழிலாளர் துறை செயலாளர் சுந்தரேசன் வரவேற்றார். விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியாதாவது: மற்ற மாநிலங்களில் வேலை செய்வது மற்றும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின்னர் மாணவர்கள் எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம், என்ன மாதிரியான படிப்பினை தொடரலாம், அதற்காக என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்கு இந்த கண்காட்சி உதவும்.
மேலும், புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்ப கல்லூரிகள் ஏராளமாக உள்ளது. கல்விக்கு அதிகமான முன்னுரிமையும் அளிக்கப்படும் மாநிலங்களில் புதுச்சேரி உள்ளது. இதற்காக புதுவை அரசு கல்வியை இலவசமாக வழங்கி வருகிறது.
மேலும், பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், நல்ல ஒரு நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணமாக உள்ளது. அதற்கான கல்வி வழங்கப்படுகிறது. அரசு பணிக்கு போக வேண்டும் என்று அனைவரின் விருப்பமாகும். அதற்காக வாய்ப்பு புதுச்சேரியில் இருந்தாலும், பிற மாநிலங்களில் சென்று வேலை செய்யும் வாய்ப்பினையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: Daily Thanthi